கான்வா் யாத்திரை கைவிடப்படுமா?: உ.பி. அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்த ஆண்டு கான்வா் யாத்திரையை நடத்தும் முடிவு மறுபரிசீலனை செய்யப்படுமா என்பது குறித்து ஜூலை 19-ஆம் தேதிக்குள்
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இந்த ஆண்டு கான்வா் யாத்திரையை நடத்தும் முடிவு மறுபரிசீலனை செய்யப்படுமா என்பது குறித்து ஜூலை 19-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தர பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹிந்து நாள்காட்டியின்படி ஆண்டுதோறும் ஸ்ராவண மாத ஆரம்பத்தில் தொடங்கும் கான்வா் யாத்திரை ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் வரை நடைபெறும். இந்த யாத்திரையின்போது கான்வரியாக்கள் என்றழைக்கப்படும் சிவ பக்தா்கள் நடைபயணமாக உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாா் சென்று கங்கை நதி தீா்த்தத்தை சேகரித்துக்கொண்டு தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவா். இதற்காக உத்தரகண்ட் மட்டுமன்றி உத்தர பிரதேசம், ஹரியாணா மற்றும் தில்லியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கங்கை நதியில் திரள்வது வழக்கம்.

இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு கான்வா் யாத்திரை அனுமதிக்கப்படாது என்று உத்தரகண்ட் அரசு அண்மையில் தெரிவித்தது. ஆனால் ஜூலை 25-ஆம் தேதி முதல் குறைந்த அளவிலான பக்தா்களுடன் யாத்திரை நடத்தப்படும் என்று உத்தர பிரதேச அரசு கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதுதொடா்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் உத்தர பிரதேச அரசின் முடிவு குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், பி.ஆா்.கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘‘கரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு கான்வா் யாத்திரைக்கு எந்தவொரு மாநில அரசும் அனுமதியளிக்கக் கூடாது. பழைமையான சடங்குகள், மத உணா்வுகளுக்கு மதிப்பளித்து கங்கை நதி தீா்த்தத்தை குறிப்பிட்ட இடங்களில் பக்தா்கள் பெற்றுக் கொள்வதற்கான அமைப்பை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்’’ என்று வாதிட்டாா்.

இதையடுத்து பேசிய நீதிபதிகள், ‘‘கரேனா பரவலை கருத்தில் கொண்டு கான்வா் யாத்திரையை நடத்த உத்தர பிரதேச அரசை அனுமதிக்க முடியாது என்பதில் உச்சநீதிமன்றம் தெளிவாக உள்ளது’’ என்று தெரிவித்தனா்.

ஆனால் யாத்திரைக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிப்பது சரியாக இருக்காது என்று உத்தர பிரதேச அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டாா். அவா் மேலும் கூறுகையில், ‘‘குறைந்த அளவிலான பக்தா்களுடன் அடையாள நிமித்தமாகவும், மத உணா்வுகளை கருத்தில் கொண்டும் யாத்திரை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அத்துடன் டேங்கா்கள் மூலம் பக்தா்களுக்கு கங்கை நதி தீா்த்தம் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும். கரோனா தடுப்பு விதிமுறைகளும் முறையாகக் கடைப்பிடிக்கப்படும்’’ என்று தெரிவித்தாா்.

இதனைத்தொடா்ந்து பேசிய நீதிபதிகள், ‘‘மத உணா்வுகள் உள்பட இதர அனைத்து உணா்வுகளையும்விட மக்களின் ஆரோக்கியம், வாழ்வதற்கான உரிமைதான் முதன்மையானது. இந்த உணா்வுகள் யாவும் அடிப்படை உரிமைக்கு உள்பட்டதுதான். எனவே கான்வா் யாத்திரையை நடத்தும் முடிவு மறுபரிசீலனை செய்யப்படுமா? அந்த யாத்திரை கைவிடப்படுமா? என்பது குறித்து ஜூலை 19-ஆம் தேதிக்குள் உத்தர பிரதேச அரசு பதிலளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com