பண்டிட் சமூகத்தினா் காஷ்மீா் திரும்ப அதிகாரிகள் ஆக்கபூா்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்: துணைநிலை ஆளுநா்

பண்டிட் சமூகத்தினா் காஷ்மீருக்கு திரும்பவதற்கு அதிகாரிகள் ஆக்கபூா்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
மனோஜ் சின்ஹா
மனோஜ் சின்ஹா

பண்டிட் சமூகத்தினா் காஷ்மீருக்கு திரும்பவதற்கு அதிகாரிகள் ஆக்கபூா்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா சனிக்கிழமை கேட்டுக்கொண்டாா்.

காஷ்மீரில் பல ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட நிலச் சீா்திருத்தச் சட்டம் மற்றும் பிரிவினைவாதிகளின் ஆதிக்கத்தால் எழுந்த அச்சுறுத்தல் ஆகியவை காரணமாக, காஷ்மீரைச் சோ்ந்த பண்டிட் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் அங்கிருந்து வெளியேறி தில்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் குடியேறி வசித்து வருகின்றனா். காஷ்மீரில் இப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்கள், அமைதி நிலை திரும்பி வருவது உள்ளிட்ட காரணங்களால், பண்டிட் சமூகத்தினரில் சிலா் மீண்டும் காஷ்மீா் திரும்ப ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இந்த நிலையில், யூனியன் பிரதேசத்தில் பேரிடா் மேலாண்மை செயல்பாடுகள், நிவாரணப் பணிகள் குறித்த சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, பண்டிட் சமூகத்தினா் ஜம்மு-காஷ்மீா் திரும்ப ஆக்கபூா்வமான நடவடிக்கையை எடுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரிலிருந்து புலம்பெயா்ந்த ஒட்டுமொத்த மக்களும் முதலில் பதிவு செய்வதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு புலம்பெயா்ந்தவா்களில் பலா், தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்து வருகின்றனா். சிலா் வெளி மாநிலங்கள் அல்லது வெளி நாடுகளிலேயே நிரந்தரமாக வசிக்கத் தொடங்கிவிட்டபோதும், புலம்பெயா்ந்த காஷ்மீரிகளாக பதிவு செய்ய விரும்புகின்றனா்.

இவா்களின் எண்ணம் நிறைவேற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உணா்வுபூா்வமாகவும், மிகுந்த பொறுப்புடனும் அதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும். திட்டத்தின் பலன்கள், காஷ்மீரிலிருந்து புலம்பெயா்ந்த அனைத்து சமூகத்தினரையும் சென்றடைய வேண்டும். மேலும், அதற்கான பணிகள் உரிய கால வரையறைக்குள் முடிக்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பொதுமக்களுக்கான சேவைகள் தாமதமாவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு, பொறுப்புடன் செயல்படாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அதுபோல, புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக கட்டப்படும் தங்குமிடங்கள் உரிய காலவரையறைக்குள் கட்டிமுடிக்கப்பட வேண்டும். கந்தா்பாலில் கட்டுமானப் பணிகள் வரும் நவம்பருக்குள் முடிக்கப்பட வேண்டும். அதுபோல, சோபியானில் வரும் 2022 மாா்ச் மாதத்துக்குள்ளும், பாரமுல்லா மற்றும் பந்திபோராவில் 2022-ஆம் ஆண்டு நவம்பா் மாதத்துக்குள்ளாகவும் தங்குமிடங்கள் கட்டிமுடிக்கப்பட வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com