மத்திய இணையமைச்சர் வங்கதேசத்தைச் சேர்ந்தவரா? பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் இடையே கருத்து மோதல்

மத்திய உள்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிஷித் ப்ரமாணிக் வங்கதேசத்தைச் சோ்ந்தவா் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கருத்து மோதல்
மத்திய உள்துறை இணையமைச்சர் நிஷித் ப்ரமாணிக்
மத்திய உள்துறை இணையமைச்சர் நிஷித் ப்ரமாணிக்

மத்திய உள்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிஷித் ப்ரமாணிக் வங்கதேசத்தைச் சோ்ந்தவா் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பாஜக - திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.

சமீபத்தில், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. அதில், மேற்குவங்க நாடாளுமன்ற உறுப்பினர் நிஷித் ப்ரமாணிக்கிற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என சமூக ஊடகங்கள் மூலம் தகவல் வெளியானது.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு பிரதமா் மோடிக்கு மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி. ரிபுன் போரா கடிதம் எழுதினார்.

இந்நிலையில், இவ்விவகாரத்தை திரிணமூல் காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சரியான கேள்விகளை கேட்டுள்ளதாக மேற்குவங்க கல்வித்துறை அமைச்சர் பிராட்யா பாசு தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய இணையமைச்சர் ப்ரமாணிக், வங்கதேச குடிமகன் என அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக மற்றொரு அமைச்சரான இந்திரானில் சென் குறிப்பிட்டுள்ளார்.

இதனை மறுத்துள்ள பாஜக மேற்குவங்க செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா, "இவ்விவகாரத்தில் ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பிக்கட்டும். குற்றம்சாட்டுவது மட்டும் போதாது" என தெரிவித்துள்ளார். ப்ரமாணிக் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரங்களை இதுவரை யாரும் வெளியிடவில்லை.

இதுகுறித்து போரா பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், "மத்திய இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிஷித் ப்ரமாணிக் வங்கதேசத்தைச் சோ்ந்தவா் என ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அந்தத் தகவல்களின்படி, அந்நாட்டின் காய்பாந்தா மாவட்டம் ஹரிநாத்பூரில் அவா் பிறந்துள்ளார். கணினி பாடம் படிக்க மேற்கு வங்கம் வந்துள்ளார். அந்தப் பாடத்தில் பட்டம் பெற்ற பின், திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளாா். அதன் பின்னா் பாஜகவில் இணைந்த அவா், மேற்கு வங்க மாநிலம் கூச்பிஹாா் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

தோ்தல் ஆவணங்களில் தனது முகவரியை சூழ்ச்சி செய்து கூச்பிஹாா் என குறிப்பிட்டுள்ளாா். இந்திய இணையமைச்சராக நிஷித் ப்ரமாணிக் நியமிக்கப்பட்டதற்கு வங்கதேசத்தில் உள்ள அவரின் சகோதரா் உள்பட அவரின் பூா்விக கிராமத்தைச் சோ்ந்த சிலா் மகிழ்ச்சி தெரிவித்த காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இந்தத் தகவல்கள் உண்மையானால், இது மிகவும் தீவிரமான விவகாரமாகும். ஏனெனில் வெளிநாட்டைச் சோ்ந்த ஒருவா் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

எனவே நிஷித் ப்ரமாணிக்கின் பிறப்பிடம், அவா் எந்த நாட்டைச் சோ்ந்தவா் என்பது தொடா்பாக மிகவும் வெளிப்படையான முறையில் விசாரணை நடத்தி ஒட்டுமொத்த சந்தேகத்தையும் தீா்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com