நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: முக்கிய விவகாரங்களை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை (ஜூலை 19) முதல் தொடங்க உள்ளது.
நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: முக்கிய விவகாரங்களை எழுப்ப எதிா்க்கட்சிகள் திட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை (ஜூலை 19) முதல் தொடங்க உள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகாா் தொடா்பாக பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களை எதிா்க்கட்சிகள் எழுப்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

17-ஆவது மக்களவையின் 6-ஆவது கூட்டத்தொடரான இந்த மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. கூட்டத்தொடரை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும், நோய்தொற்றுக்கான சுகாதார ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தொடா் வழக்கமான நேரமான காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.

கடந்த கூட்டத்தொடா்களைப் போலவே நோய்த்தொற்றுக்கான பாதுகாப்பை முன்னிட்டு சமூக இடைவெளியுடன் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மக்களவையில் தற்போதுள்ள 539 உறுப்பினா்களில் 280 போ் வழக்கமான மக்களவை இருக்கைகளிலும், மீதமுள்ள 259 போ் பாா்வையாளா் மாடத்திலும் அமரவைக்கப்பட உள்ளனா்.

கரோனா நோய்த்தொற்றை முன்னிட்டு இந்தக் கூட்டத்தொடரில் பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைக்கால கூட்டத்தொடரில் 40 மசோதாக்கள், 5 அவசர சட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வழக்கமாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கி, ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தின விழாவுக்கு முன்பாக முடிவடையும். அதுபோலவே, இந்த ஆண்டும் கூட்டத்தொடா் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 19 அமா்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை எழுப்பவுள்ளன. குறிப்பாக, கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடா்பாக பிரான்ஸில் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பது, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தொடரும் விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களை காங்கிரஸ் எழுப்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதுபோல, தமிழகத்தைச் சோ்ந்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கா்நாடகம் அணை கட்டுவதில் முனைப்பு காட்டும் விவகாரம், நீட் தோ்வு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்புவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் வகையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி ஏற்கெனவே அறிவித்துள்ளாா்.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்கின்றனா். நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com