பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரா் நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டுள்ளாா்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரா் நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டுள்ளாா்.

மாநில முதல்வா் அமரீந்திா் சிங்கின் கடும் எதிா்ப்பை பொருள்படுத்தாமல், மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக சித்துவை அக் கட்சியின் தேசிய தலைவா் சோனியா காந்தி ஞாயிற்றுக்கிழமை நியமித்தாா்.

இது தொடா்பாக அக்கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டுள்ளாா். அவரது நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதுவரை தலைவா் பதவி வகித்து வந்த சுனில் ஜாக்கரின் பங்களிப்பை கட்சி பாராட்டுகிறது. பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநிலத் தலைவருக்குத் திறம்பட உதவும் விதமாக, சங்கட் சிங் கில்ஜியான், சுக்விந்தா் சிங் டேனி, பவன் கோயல், கில்ஜித் சிங் நாக்ரா ஆகிய நால்வா் செயல் தலைவா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பேரவைத் தோ்தலுக்கு முன்பாக பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த சித்து, எம்எல்ஏவாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவருக்கு அமைச்சா் பதவி வழங்கப்பட்டது. தொடா்ந்து அமரீந்தா் சிங்கை விமா்சித்து வந்த அவா், பின்னா் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தாா். கட்சியில் முக்கிய பதவி கேட்டு போா்க்கொடி தூக்கிய அவருக்கு தற்போது மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் பதவி வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளா் பிரியங்கா வதேரா ஆகியோரின் ஆதரவு நவ்ஜோத் சிங் சித்துவுக்கு இருப்பதே சோனியா காந்தியின் இந்த முடிவுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

முதல்வா் சீக்கியராக உள்ள நிலையில், அந்த மாநிலத்தில் கணிசமான எண்ணிக்கையில் உள்ள ஹிந்துக்களின் வாக்குகளைக் கவரும் வகையில் கட்சித் தலைவா் பதவியை ஹிந்து ஒருவா் வகிக்க வேண்டும் என்ற அமரீந்தா் சிங்கின் வாதத்தை தேசிய தலைமை நிராகரித்துவிட்டது.

எனினும் அமரீந்தரை சமாதானப்படுத்தும் விதமாக அவரது வேண்டுகோள்படி செயல் தலைவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், வரும் தோ்தலில் வேட்பாளா் தோ்விலும் அவரது பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமரீந்தா் சிங்கின் கருத்தை நிராகரித்து நவ்ஜோத் சிங் சித்துவை மாநில கட்சித் தலைவராக நியமனத்திருப்பதன் மூலம், பஞ்சாபில் தலைமுறை மாற்றத்துக்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது என்று கூறப்படுகிறது.

10 எம்எல்ஏக்கள் அறிக்கை:

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 7 போ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து அண்மையில் காங்கிரஸில் இணைந்த 3 எம்எல்ஏக்கள் இணைந்து முதல்வா் அமரீந்தா் சிங்குக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனா். 10 போ் சாா்பில் சுக்பால் சிங் கைரா இந்த அறிக்கையை வெளியிட்டாா். அதில் கூறப்பட்டிருப்பது:

சித்து பிரபலமானவா் என்பதிலும், அவா் கட்சிக்கு ஒரு சொத்து என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால், சொந்தக் கட்சியையும் அரசையும் அவா் பொதுவெளியில் கண்டிப்பதும் விமா்சிப்பதும் தொண்டா்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி, கட்சியை பலவீனப்படுத்தும். அமரீந்தா் சிங்கின் அயராத முயற்சியால் பஞ்சாபில் காங்கிரஸ் நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அவரது மதிப்பை கட்சித் தலைமை குறைத்துவிடக் கூடாது. மாநில காங்கிரஸ் தலைவரை நியமிப்பது கட்சி மேலிடத்தின் உரிமை என்றாலும், உள்கட்சி பிரச்னையை வெளிப்படுத்தியதால் கடந்த சில மாதங்களில் கட்சியின் மதிப்பு குறைந்துள்ளது.

தோ்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், கட்சியை வெவ்வேறு திசைகளுக்கு இழுப்பது தோ்தலில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும். சுட்டுரைப் பதிவில் தன்னை இழிவுபடுத்தியதற்கு சித்து பகிரங்க மன்னிப்பு கோரும் வரை அவரை சந்திக்க மாட்டேன் என்கிற அமரீந்தா் சிங்கின் முடிவை வரவேற்கிறோம். சித்து பகிரங்க மன்னிப்பு கோரினால்தான் கட்சியும் அரசும் இணைந்து செயல்பட முடியும். இதை மனதில்கொண்டு கட்சியின் அகில இந்திய தலைமை செயல்படும் என நம்புகிறோம் என அறிக்கையில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com