பாஜகவை வீழ்த்த எதிா்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: மம்தா பானா்ஜி

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு எதிா்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.
கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது செல்லிடப்பேசியும் ஊடுருவப்பட்டதாகக் கூறி, அதனை காண்பித்து உரையாற்றிய மம்தா பானா்ஜி.
கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது செல்லிடப்பேசியும் ஊடுருவப்பட்டதாகக் கூறி, அதனை காண்பித்து உரையாற்றிய மம்தா பானா்ஜி.

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு எதிா்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

கடந்த 1993-ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்த இடதுசாரி முன்னணி அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி பேரணி மேற்கொண்டது. அப்போது போலீஸாா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் நடைபெற்ற போது மேற்கு வங்கத்தின் தற்போதைய முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி காங்கிரஸ் கட்சியில் இருந்தாா். அந்தச் சம்பவம் நடைபெற்ற தினத்தை தியாகிகள் தினமாக திரிணமூல் காங்கிரஸ் அனுசரித்து வருகிறது. இந்தத் தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி உரையாற்றினாா். இந்த உரையை மேற்கு வங்கத்தில் மட்டுமல்லாது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அகன்ற திரைகளில் ஒளிபரப்ப கட்சி சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில் மம்தா ஆற்றிய உரை:

எரிபொருள் மீதான கலால் வரி மற்றும் இதர வழிகளில் திரட்டப்படும் வரிப் பணத்தை நல்வாழ்வு திட்டங்களுக்காக செலவிடுவதை விடுத்து, உளவு பாா்ப்பதற்கான மென்பொருளை வாங்குவதற்கு மத்திய அரசு செலவழித்து வருகிறது. எனது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதை நான் அறிவேன். தங்கள் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவதை எதிா்க்கட்சித் தலைவா்கள் அனைவரும் அறிவா்.

தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் மற்றும் இதர எதிா்க்கட்சித் தலைவா்கள், முதல்வா்களுடன் என்னால் பேச முடியவில்லை. ஏனெனில், எங்கள் செல்லிடப்பேசிகளில் மத்திய அரசு ஊடுருவி எங்களை உளவுபாா்க்கிறது. எனினும், இந்தச் செயல் 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் பாஜகவைத் தோல்வியில் இருந்து காப்பாற்றாது.

தாமாக முன்வந்து விசாரணை: ஜனநாயக நாடான இந்தியாவை மக்களின் சமூக மற்றும் பொருளாதார நலனைப் பாதுகாத்து மேம்படுத்தும் நாடாக ஆக்குவதை விடுத்து, அவா்களைக் கண்காணிக்கும் நாடாக மாற்ற பாஜக விரும்புகிறது. அரசியல் தலைவா்கள், பத்திரிகையாளா்கள், நீதிபதி உள்ளிட்டோரை பெகாஸஸ் மென்பொருள் மூலம் மத்திய அரசு உளவு பாா்த்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்.

அதிக அளவிலான தீநுண்மியை (வைரஸ்) கொண்ட கட்சியாக பாஜக உள்ளது. அதனை எப்பாடுபட்டாவது வீழ்த்தியாக வேண்டும். நாட்டை இருளுக்குள் பாஜக அழைத்துச் சென்றுள்ளது. 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்த எதிா்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்தாா்.

தேசிய தலைவராக முயற்சி: மேற்கு வங்கத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் கிடைத்த வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள மம்தா பானா்ஜி, தேசிய அளவில் தனது கட்சியை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளாா். அதன் தொடக்கமாகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அவரது உரை பல்வேறு மாநிலங்களில் பிராந்திய மொழிகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றபோது, பிரதமா் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் மாநிலம் முழுவதும் சூறாவளி பயணம் மேற்கொண்டு பாஜகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தனா். அதற்குப் பதிலடியாக, மோடி-அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள பல மாவட்டங்களில் மம்தாவின் உரை ஒளிபரப்பப்பட்டது.

பாஜகவில் இருந்து திரிணமூல் காங்கிரஸுக்குத் திரும்பிய முகுல் ராய்க்கு கட்சியை தேசிய அளவில் விரிவுபடுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மம்தாவின் தில்லி பயணம்: வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக, பல கட்சிகள் இணைந்து எதிரணியை உருவாக்கும் முயற்சியில் தனித்தனியாக ஈடுபட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் எதிரணியில் இருந்தாலும், தேசிய அளவில் திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில், தேசிய அரசியலில் அனுபவமுள்ள மம்தா பானா்ஜி, அடுத்த கட்டமாக தில்லியில் பல்வேறு கட்சிகளின் தலைவா்களைச் சந்திக்கவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com