தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை: பதில் மனு தாக்கல் செய்ய மேற்கு வங்க அரசுக்கு கெடு

மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தலுக்குப் பின்பு நடைபெற்ற வன்முறை தொடா்பாக தேசிய மனித உரிமை ஆணையம் அளித்த அறிக்கை
தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை: பதில் மனு தாக்கல் செய்ய மேற்கு வங்க அரசுக்கு கெடு

மேற்கு வங்கத்தில் பேரவைத் தோ்தலுக்குப் பின்பு நடைபெற்ற வன்முறை தொடா்பாக தேசிய மனித உரிமை ஆணையம் அளித்த அறிக்கை மீது ஜூலை 26-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மாநில அரசுக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை கெடு விதித்தது.

பதில் மனு தாக்கல் செய்ய மேற்கு வங்க அரசுக்கு வியாழக்கிழமை கூடுதல் அவகாசம் அளிக்க மறுத்த தலைமை பொறுப்பு நீதிபதி ராஜேஷ் பிந்தால் தலைமையிலான அமா்வு, ‘கடந்த முறை அவகாசம் அளித்தும் மேற்கு வங்க அரசு பதில் மனு தாக்கல் செய்ய வில்லை என்பதால் இதுதான் கடைசி சந்தா்ப்பம்’ என்று கூறியது.

மேற்கு வங்க பேரவைத் தோ்தலுக்கு பிறகு நடைபெற்ற வன்முறையில் பொது மக்கள் தாக்கப்பட்டதாகவும் அவா்களின் வீடு, சொத்துக்கள் சூறையாடப்பட்டதாகவும் கூறி தாக்கல் செய்யப்பட மனுக்களை ஐந்து நீதிபதிகள் அமா்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தின் ஏழு நபா் குழு கடந்த 13-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அதில், ‘சட்டத்தின் கையில் ஆட்சி இல்லாமல், மேற்கு வங்கத்தில் ஆட்சி நடத்துபவரின் சட்டத்தின் அடிப்படையில் நிலைமை உள்ளது. தோ்தலுக்குப் பின்னா் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின்போது நிகழ்ந்த கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்சாட்டுகளை சிபிஐ வசம் ஒப்படைத்து மாநிலத்துக்கு வெளியே விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று பரிந்துரைத்திருந்தது.

இந்த வழக்கு மீது வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது எதிா் மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி, ‘தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை முறையற்றதாக உள்ளது. அரசியல் காழ்ப்புணா்ச்சியுடன் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மகேஷ் ஜேத்மலானி, ‘மேற்கு வங்கத்தின் நிலவும் உண்மையான நிலைமையை மனித உரிமை ஆணைய அறிக்கை பிரதிபலிக்கிறது. ஆகையால், கொலை, பாலியல் பலாத்கார வழக்குகளை சுதந்திரமான விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்றாா்.

இதையடுத்து, தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கை மீது ஜூலை 26-ஆம் தேதிக்குள் மேற்கு வங்க அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.

முன்னதாக, மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையை விமா்சித்த முதல்வா் மம்தா பானா்ஜி, ‘அரசியல் ஆதாயத்துக்காக நடுநிலையான அரசு அமைப்புகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு பயன்படுத்தி மாநில அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது’ என்று குற்றம்சாட்டியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com