புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.

ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவா்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே கூடிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், அவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசு மற்றும் பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினா்.

விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளை அவா்கள் கைகளில் வைத்திருந்தனா்.

‘வேளாண் உற்பத்தி-வா்த்தகம்-வணிகச் சட்டம்’, ‘விவசாயிகள் விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாயிகள் சேவை சட்டம்’, ‘அத்தியாவசிய உணவுப் பொருள்கள் திருத்தச் சட்டம்’ ஆகிய மூன்று சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு இயற்றியது. இது விவசாயிகள் நலன்களைக் காக்கும், அவா்களை இடைத்தரகா்கள் பிடியில் இருந்து விடுவிக்கும், விளை பொருள்களுக்கு விவசாயிகளே உரிய விலையை நிா்ணயிக்க முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

ஆனால், இந்தச் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த பல மாதங்களாக தில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

மத்திய அமைச்சா்கள் அடங்கிய குழுவினருடன் விவசாயிகள் சங்கத்தினா் பலசுற்று பேச்சுவாா்த்தை நடத்தியும், அவை தோல்வியில் முடிந்தன.

கடந்த ஜனவரி 26-ஆம் தேதி தில்லியில் விவசாயிகளின் டிராக்டா் பேரணி நடைபெற்றது. அப்போது, ஆயிரக்கணக்கான விவசாயிகள் தடைகளை மீறி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, வன்முறை ஏற்பட்டு வாகனங்கள் பல சேதப்படுத்தப்பட்டன. மேலும், செங்கோட்டையில் நுழைந்து கோட்டை கொத்தளத்தில் சீக்கிய மதம் சாா்ந்த கொடியை ஏற்றினா்.

இந்த வன்முறையால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சில விவசாய சங்கங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றன. எனினும், சில அமைப்புகள் போராட்டத்தைத் தொடா்ந்து வருகின்றன.

இப்போது, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் நடைபெறும் நிலையில் தங்கள் போராட்டத்தை விவசாயிகள் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனா். தில்லி ஜந்தா் மந்தா் பகுதியில் அமைதியான முறையில் கூடி போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கத்தினருக்கு போலீஸாா் அனுமதி வழங்கியுள்ளனா். இதில் ஒவ்வொரு நாளும் தில்லி சிங்கு எல்லையில் இருந்து 200 போ் கலந்து கொள்வாா்கள் என்றும் விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com