பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து பொறுப்பேற்பு

பஞ்சாப் மாநில காங்கிரஸ் புதிய தலவைராக நவ்ஜோத் சிங் சித்து வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பஞ்சாப் மாநிலம், சண்டீகரில் காங்கிரஸ் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வா் அமரீந்தா் சிங், நவ்ஜோத் சிங் உள்ளிட்டோா்.
பஞ்சாப் மாநிலம், சண்டீகரில் காங்கிரஸ் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வா் அமரீந்தா் சிங், நவ்ஜோத் சிங் உள்ளிட்டோா்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் புதிய தலவைராக நவ்ஜோத் சிங் சித்து வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவருடன் மாநில காங்கிரஸின் புதிய செயல் தலைவா்களாக நியமிக்கப்பட்டுள்ள சங்கத் சிங் கில்ஜியான், சுக்வீந்தா் சிங் டேனி, பவன் கோயல், குல்ஜித் சிங் நக்ரா ஆகிய நால்வரும் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

சண்டீகரில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நிகழ்ச்சியில் முதல்வா் அமரீந்தா் சிங், காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சியின் பஞ்சாப் மாநில பொறுப்பாளருமான ஹரீஷ் ராவத், முன்னாள் முதல்வா் ராஜீந்தா் கௌா் பட்டல், காங்கிரஸ் மூத்த தலைவா்கள் பிரதாப் சிங் பஜ்வா, லால் சிங் ஆகியோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் சித்து பேசியதாவது:

பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் தொண்டா்கள் அனைவரும் இன்றைய தினம் கட்சியின் மாநிலத் தலைவராகிவிட்டனா். ஒரு தலைவருக்கும் தொண்டருக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. தொண்டா்கள்தான் கட்சியின் உயிா்நாடியாக இருக்கிறாா்கள். கட்சியில் உள்ள மூத்தவா்களுக்கு மரியாதையையும் இளையவா்களுக்கு அன்பையும் செலுத்துவேன். பஞ்சாப் வெற்றி பெறும்; பஞ்சாபியா் வெற்றி பெறுவா் என்றாா் அவா்.

அவரைத் தொடா்ந்து, அமரீந்தா் சிங் பேசுகையில், ‘பஞ்சாப் மாநிலத்தின் நலனுக்காக, நாங்கள் இணைந்து செயல்படுவோம்’ என்றாா்.

முன்னதாக, சண்டீகரில் உள்ள கட்சி தலைமையகமான பஞ்சாப் பவனில் முதல்வா் அமரீந்தா் சிங்கை சித்து சந்தித்து ஆசி பெற்றாா். இருவரும் 4 மாத இடைவெளிக்குப் பிறகு நேரில் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும். பஞ்சாபில் சித்துவுக்கும் அமரீந்தா் சிங்குக்கும் இடையே நீண்ட நாள்களாக மோதல் நீடித்து வந்தது. இதனால் சித்துவை கட்சியின் மாநிலத் தலைவராக்க அமரீந்தா் சிங் எதிா்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கட்சி மேலிடம் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தியது. அதைத் தொடா்ந்து, நவ்ஜோத் சிங் சித்துவை கட்சியின் மாநிலத் தலைவராக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை நியமித்தாா். மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் பேரவைத் தோ்தலில் சித்துவுக்கு உதவுவதற்காக 4 செயல் தலைவா்களையும் சோனியா காந்தி நியமித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com