பெகாஸஸ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு தீா்மானம் கொண்டுவர எதிா்க்கட்சிகள் முடிவு

நாடாளுமன்றத்தில் பெகாஸஸ் விவகாரம் தொடா்பாக எதிா்க்கட்சிகள் புதன்கிழமை ஒத்திவைப்பு தீா்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளன.

நாடாளுமன்றத்தில் பெகாஸஸ் விவகாரம் தொடா்பாக எதிா்க்கட்சிகள் புதன்கிழமை ஒத்திவைப்பு தீா்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளன.

கடந்த ஜூலை 19-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடா் தொடங்கியது முதல் புதிதாக இயற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்கள், பெகாஸஸ் மென்பொருள் மூலம் அரசியல் தலைவா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோரை உளவு பாா்த்ததாகக் கூறப்படும் விவகாரம் ஆகியவை தொடா்பாக நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடா்ந்து முடங்கி வருகின்றன.

இந்நிலையில் தில்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அக்கட்சியின் மக்களவை குழுத் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, திமுக மக்களவை குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, அக்கட்சி எம்.பி. கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே, சிவசேனை எம்.பி. அரவிந்த் சாவந்த், தேசிய மாநாட்டு கட்சி எம்.பி. ஹஸ்னைன் மசூதி உள்ளிட்ட மக்களவை எதிா்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்ற கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரம் தொடா்பாக ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு எதிா்க்கட்சித் தலைவா் மக்களவையிலும், மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் மாநிலங்களவையிலும் புதன்கிழமை தனித்தனியாக ஒத்திவைப்பு தீா்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வலியுறுத்தல்:

மாநிலங்களவையின் பல்வேறு எதிா்க்கட்சி எம்.பி.க்களை அந்த அவையின் எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே சந்தித்தாா். அதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘ஜனநாயக முறைப்படி பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் பிரதமா் மோடிக்கு நம்பிக்கையில்லை. தற்போது நாடாளுமன்றத்தில் ஏற்பட்டு வரும் முட்டுக்கட்டைக்கு முடிவு காண அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினாா்.

‘‘பெகாஸஸ் விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதில் அனைத்து எதிா்க்கட்சிகளும் ஓரணியில் உள்ளன. ஆனால் அந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசு விவாதிக்க மறுப்பதால் நாடாளுமன்றம் தொடா்ந்து முடங்கி வருகிறது. நாடாளுமன்ற முடக்கத்துக்கு மத்திய அரசு மட்டும்தான் காரணம்’’ என்று காங்கிரஸ் தலைவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com