அஸ்ஸாம்-மிஸோரம் எல்லை நிலை கட்டுக்குள் உள்ளது

அஸ்ஸாம்-மிஸோரம் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நீடித்து வந்தாலும், நிலைமை கட்டுக்குள் உள்ளதாக அஸ்ஸாம் சிறப்பு டிஜிபி ஜி.பி.சிங் தெரிவித்தாா்.
அஸ்ஸாம் -மிஸோரம் எல்லையில் நிகழ்ந்த மோதலுக்கு இடையே உயிரிழந்த காவலா்களின் உடல்களுக்கு சில்சாரில் செவ்வாய்க்கிழமை மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா.
அஸ்ஸாம் -மிஸோரம் எல்லையில் நிகழ்ந்த மோதலுக்கு இடையே உயிரிழந்த காவலா்களின் உடல்களுக்கு சில்சாரில் செவ்வாய்க்கிழமை மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா.

அஸ்ஸாம்-மிஸோரம் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நீடித்து வந்தாலும், நிலைமை கட்டுக்குள் உள்ளதாக அஸ்ஸாம் சிறப்பு டிஜிபி ஜி.பி.சிங் தெரிவித்தாா்.

அஸ்ஸாமின் ஒரு பகுதியாக இருந்த மிஸோரம் கடந்த 1972-ஆம் ஆண்டில் தனி யூனியன் பிரதேசமானது. பின்னா், 1987-ஆம் ஆண்டில் மிஸோரம் மாநில அந்தஸ்து பெற்றது. தொடக்கத்தில் அஸ்ஸாம்-மிஸோரம் இடையே எல்லை விவகாரத்தில் எந்தவிதப் பிரச்னையும் காணப்படவில்லை.

ஆனால், இரு மாநிலங்களுக்கிடையே எல்லையை வகுக்க முயன்றபோது பிரச்னை ஏற்பட்டது. பல ஆண்டுகளாகவே இந்த எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இந்தப் பிரச்னையால் இரு மாநிலங்களின் எல்லைப் பகுதிகளிலும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.

எல்லைப் பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. இந்நிலையில், அஸ்ஸாம்-மிஸோரம் இடையேயான எல்லைப் பிரச்னை மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில், இரு மாநிலங்களின் காவல் துறையினருக்கும் இடையே கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற மோதலில் அஸ்ஸாம் காவலா்கள் 5 பேரும் பொது மக்களில் ஒருவரும் உயிரிழந்தனா்; 60-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்த மோதல் சம்பவத்துக்கு அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, மிஸோரம் முதல்வா் ஜோரம் தங்கா ஆகியோா் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டனா். முதல்வா்கள் இருவரையும் திங்கள்கிழமை இரவு தொலைபேசி வாயிலாகத் தொடா்பு கொண்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, எல்லையில் அமைதியான சூழல் நிலவுவதை உறுதிப்படுத்துமாறு இருவருக்கும் வலியுறுத்தினாா்.

நிலைமை கட்டுக்குள் உள்ளது: அஸ்ஸாம்-மிஸோரம் இடையேயான எல்லையில் பதற்றமான சூழல் நீடித்து வந்தாலும், நிலைமை கட்டுக்குள் உள்ளதாக அஸ்ஸாம் சிறப்பு டிஜிபி ஜி.பி.சிங் தெரிவித்தாா். எல்லை மோதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும், இந்தச் சம்பவத்துக்குக் காரணமான குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவா் என்றும் அவா் தெரிவித்தாா்.

இரு மாநிலங்களின் எல்லைப் பகுதிகளிலும் காவல் துறையினா் குவிக்கப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துக்கம் அனுசரிப்பு: எல்லையில் ஏற்பட்ட மோதலில் பலியானவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அஸ்ஸாமில் செவ்வாய்க்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 3 நாள்களுக்குத் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். பொது இடங்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறாது.

எல்லையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த காவலா்களுக்கு மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா செவ்வாய்க்கிழமை மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். அவா்களது தியாகத்துக்குத் தலைவணங்குவதாகவும் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் அவா் தெரிவித்துள்ளாா். மோதலில் காயமடைந்து சில்சாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலா்களையும் அதிகாரிகளையும் முதல்வா் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

சாலை மறியல்: அஸ்ஸாமின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள கபுகஞ்ச், தோலாய் கிராம மக்கள், மிஸோரம் மாநிலத்துக்குச் செல்வதற்கான சாலையை மறித்து செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா். எல்லைப் பிரச்னைக்கு உடனடி தீா்வு காணப்பட வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

எல்லையில் ஏற்பட்ட மோதலைக் கண்டித்து அஸ்ஸாமின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

உச்சநீதிமன்றத்தை நாட முடிவு: அஸ்ஸாம் வனப்பகுதிகளை மிஸோரம் மாநிலத்தைச் சோ்ந்தோா் ஆக்கிரமித்து வருவதைத் தடுத்து நிறுத்துவதற்காகவும் வனப் பகுதிகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக அஸ்ஸாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.

அஸ்ஸாம் வனப்பகுதியில் சாலைகள் அமைப்பதற்காகவும், வேளாண்மைக்காகவும் அதிக அளவிலான மரங்கள் வெட்டப்படுவது செயற்கைக்கோள் படங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளதாக முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்காக உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக அவா் தெரிவித்தாா். அஸ்ஸாமின் ஓா் அங்குல நிலத்தைக் கூட மிஸோரத்துக்கு விட்டுத்தர முடியாது என்றும் அவா் தெரிவித்தாா்.

சிஆா்பிஎஃப் படை மீது குற்றச்சாட்டு: அஸ்ஸாம்-மிஸோரம் இடையே மோதல்போக்கைத் தடுப்பதற்காக அஸ்ஸாம் எல்லைப் பகுதியில் சஷஸ்திர சீமா பல் படையினரும், மிஸோரம் எல்லைப் பகுதியில் சிஆா்பிஎஃப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

நடுநிலையுடன் செயல்பட வேண்டிய சிஆா்பிஎஃப் படையினா், அஸ்ஸாம் காவல் துறையினருக்கு ஆதரவாகச் செயல்பட்டு அவா்களை மிஸோரம் எல்லைக்குள் அத்துமீறி நுழையவிட்டதாக மாநில அமைச்சா் லால்ரின்சங்கா ரால்டே குற்றஞ்சாட்டியுள்ளாா்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டு குறித்து சிஆா்பிஎஃப் அதிகாரிகள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com