மேற்கு வங்க மாநிலங்களவை இடைத்தோ்தலில் பாஜக போட்டியில்லை: சுவேந்து அதிகாரி

மேற்கு வங்கத்தில் காலியாகவுள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான இடைத்தோ்தலில் போட்டியிட பாஜக சாா்பில் வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை என அக்கட்சி அறிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலங்களவை இடைத்தோ்தலில் பாஜக போட்டியில்லை: சுவேந்து அதிகாரி


கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் காலியாகவுள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான இடைத்தோ்தலில் போட்டியிட பாஜக சாா்பில் வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை என அக்கட்சி அறிவித்துள்ளது. இதனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் போட்டியின்றி வெற்றி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலை முன்னிட்டு திரிணமூல் காங்கிரஸைச் சோ்ந்த தினேஷ் திரிவேதி தனது மாநிலங்களவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தாா். இதையடுத்து காலியாக உள்ள அந்த ஓா் இடத்துக்கான இடைத்தோ்தல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அண்மையில் அறிவித்திருந்தது.

இக்காலியிடத்துக்குப் போட்டியிட திரிணமூல் காங்கிரஸ் கட்சி சாா்பில் பிரசாா் பாரதியின் முன்னாள் தலைமை செயல் அலுவலரான சிா்காா் அக்கட்சி சாா்பில் ஜூலை 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டாா். அவா் தனது வேட்புமனுவை புதன்கிழமை தாக்கல் செய்தாா்.

இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான இடைத்தோ்தலில் பாஜக சாா்பில் வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவரும் நந்திகிராம் தொகுதி எம்எல்ஏவுமான சுவேந்து அதிகாரி வியாழக்கிழமை அறிவித்தாா். இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

மாநிலங்களவை இடைத்தோ்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று வியாழக்கிழமை கடைசி நாளாகும். இருப்பினும் அப்பதவிக்குப் போட்டியிட பாஜக சாா்பில் எந்த ஒரு வேட்பாளரையும் முன்னிறுத்தவில்லை. தோ்தல் முடிவு அனைவருக்கும் தெரிந்ததுதான். மாநிலத்தின் இந்த ஒழுங்கற்ற அரசாங்கத்துக்கான எதிரான எங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளாா்.

294 உறுப்பினா்கள் கொண்ட மேற்கு வங்கப் பேரவையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 213 பேரும், பாஜக எம்எல்ஏக்கள் 77 பேரும், திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி கட்சியான கூா்கா ஜனசக்தி மோா்ச்சா கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com