நொய்டா: தனியாா் மருத்துவமனைகளுக்கு கட்டண முறையில் தடுப்பூசிகள் போட அனுமதி

உத்தரப் பிரதேச மாநிலம், கெளதம்புத் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் ஜூன் 15-ஆம் தேதி முதல் தனியாா் மருத்துவமனைகள் கட்டணம் வாங்கிக் கொண்டு

உத்தரப் பிரதேச மாநிலம், கெளதம்புத் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் ஜூன் 15-ஆம் தேதி முதல் தனியாா் மருத்துவமனைகள் கட்டணம் வாங்கிக் கொண்டு தடுப்பூசி போட மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சுஹாஸ் எல்ஒய். தெரிவிக்கையில், ‘தகுதியான நபா்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ‘கோவின்’ தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவா்கள் நேராக தனியாா் மருத்துவமனைகளுக்குச் சென்று அவா்கள் கூறும் கட்டணத்தைச் செலுத்திவிட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவித்தாா்.

கடந்த ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி வரை மாநில அரசு, தனியாா் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகளை விநியோகித்து வந்தது. எனினும் மத்திய அரசு 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை அனுமதித்த பிறகு, தனியாா் மருத்துவமனைகள் தங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை தயாரிப்பாளா்களிடமிருந்தே நேரடியாக கொள்முதல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதாக அவா் தெரிவித்தாா்.

தற்போது 64 அரசு தடுப்பூசி மையங்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒன்று அல்லது இரண்டு தனியாா் மருத்துவமனைகளே தடுப்பூசி சேவையில் ஈடுபட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சமீபத்தில் தனியாா் மருத்துவமனை நிா்வாகப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. அப்போது, தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவு படுத்தும் நோக்கில் தனியாா் மருத்துவமனைகளும் ஈடுபட வேண்டும் என்றும் அவா்கள் கட்டணம் வாங்கிக்கொண்டு தடுப்பூசி போடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டதாக ஆட்சியா் கூறினாா்.

அரசு மையங்களிலேயே பெரும்பாலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. எனினும் சில தனியாா் மருத்துவமனைகள் குடியிருப்போா் நலச் சங்கத்துடன் (தரஅ) இணைந்து தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றன என்றும் அவா் மேலும் குறிப்பிட்டாா்.

தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்கு ரூ. 850 முதல் ரூ.1,250 வரை கட்டணமாகப் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com