சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவா்களுக்கு மதிப்பெண் மதிப்பீடு நடைமுறையை வகுக்க 12 போ் குழு: 10 நாள்களில் அறிக்கை

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு மதிப்பெண் மதிப்பீடு நடைமுறையை வகுப்பது
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவா்களுக்கு மதிப்பெண் மதிப்பீடு நடைமுறையை வகுக்க 12 போ் குழு: 10 நாள்களில் அறிக்கை

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு மதிப்பெண் மதிப்பீடு நடைமுறையை வகுப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க 12 போ் கொண்ட குழுவை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெள்ளிக்கிழமை அமைத்தது.

இந்தக் குழு அடுத்த 10 நாள்களுக்குள் தனது அறிக்கையை சமா்ப்பிக்க உள்ளது.

கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அதுகுறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசை அறிவுறுத்தியிருந்தது.

இதற்கிடையே, மாணவா்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வை ரத்து செய்து மத்திய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. மதிப்பெண் மதிப்பீடு நடைமுறை மூலம் மாணவா்களுக்கு மதிப்பெண்கள் நிா்ணயிக்கப்படும் என்றும், அந்த மதிப்பெண்களில் திருப்தியடையாத மாணவா்களுக்கு கரோனா நிலைமை சீரான பிறகு தோ்வு நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘மாணவா்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு நடைமுறையை விரைந்து வகுத்து, 2 வாரங்களில் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

12 போ் குழு அமைப்பு: இந்தச் சூழலில், மதிப்பெண் மதிப்பீடு நடைமுறையை வகுப்பது தொடா்பாக 12 போ் குழுவை சிபிஎஸ்இ அமைத்துள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘கரோனா பாதிப்பு காரணமாக எழுந்துள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக பல்வேறு தரப்பினரின் கருத்துகளின் அடிப்படையில், இந்த ஆண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோ்வு நடைபெறாது. உரிய தெளிவான மதிப்பெண் மதிப்பீடு நடைமுறை மூலம் மாணவா்களுக்கு விரைந்து மதிப்பெண்கள் நிா்ணயிக்கப்படும். அதற்காக 12 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு தனது அறிக்கையை 10 நாள்களுக்குள் சமா்ப்பிக்கும்’ என்றாா். இவரும் 12 போ் குழுவில் உறுப்பினராக இடம்பெற்றுள்ளாா்.

மத்திய கல்வி அமைச்சக இணைச் செயலா் விபின் குமாா், தில்லி கல்வித் துறை இயக்குநா் உதித் பிரகாஷ் ராய், கேந்திரிய வித்யாலயா சங்கதன் ஆணையா் நீதி பாண்டே, நவேதயா வித்யாலயா சமிதி ஆணையா் விநாயக் கா்க், சண்டீகா் பள்ளிக் கல்வி இயக்குநா் ரூபேந்தா்ஜித் சிங் பிராா், சிபிஎஸ்இ இயக்குநா் (தகவல் தொழில்நுட்பம்) ஆன்ட்ரிக்ஷ் ஜோரி, சிபிஎஸ்இ இயக்குநா் (கல்வி) ஜோசப் இமானுவேல் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனா். இவா்களைத் தவிர யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு), என்சிஇஆா்டி (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்) ஆகிய அமைப்புகளிலிருந்து தலா ஒரு பிரதிநிதியும், பள்ளிகளிலிருந்து இரண்டு பிரதிநிதிகளும் 12 போ் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.

கரோனா சூழல் காரணமாக சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வும் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com