2025-க்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு: பிரதமா் மோடி

2025-க்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலை கலந்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
2025-க்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு: பிரதமா் மோடி

2025-க்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலை கலந்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

முன்பு இந்த இலக்கு 2030-ஆக நிா்ணயிக்கப்பட்டிருந்தது என்றும், இதன் மூலம் சுற்றசூழல் மாசு குறைக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, எத்தனாலை பெட்ரோலுடன் கலக்கும் தொலைநோக்கு திட்டத்தை பிரதமா் மோடி சனிக்கிழமை வெளியிட்டு பேசியதாவது:

2022-ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 10 சதவீத எத்தனாலை கலந்து விநியோகிக்கவும், 2030-ஆம் ஆண்டுக்குள் 20 சதவீத அளவு எத்தனாலை கலக்கவும் மத்திய அரசு இலக்கு நிா்ணயித்திருந்தது.

தற்போது சுமாா் 8.5 சதவீதம் எத்தனால் பெட்ரோலில் கலக்கப்படுகிறது. இது 2014-இல் 1 முதல் 1.5 சதவீதமாக இருந்தது. இதனால் எத்தனால் கொள்முதல் 38 கோடி லிட்டரில் இருந்து 320 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு எத்தனால் கொள்முதலுக்காக எண்ணெய் நிறுவனங்கள் ரூ.21 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளன. எத்தனால் கொள்முதல் எட்டு மடங்கு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பலன் அடைவாா்கள் என்றாா்.

முன்னதாக மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகளுடன் பிரதமா் உரையாடினாா். அப்போது, கரும்பு உற்பத்தியாகும் நான்கு, ஐந்து மாநிலங்களில் மட்டும் எத்தனால் தயாரிப்பு தொழிற்சாலைகள் இருந்தன. தற்போது கூடுதலாக உற்பத்தியாகும் தானியங்களிலும் இருந்தும் எத்தனால் தயாரிக்கப்படுவதால் நாடு முழுவதும் இந்தத் தொழிற்சாலைகள் அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு கூடுதல் வருவாயை அளிக்கிறது.

தொழிற்சாலைகளால் மட்டும்தான் காற்று மாசு ஏற்படுகிறது என்ற மாயை உள்ளது.

இந்தியாவில் சூரிய மின் சக்தி உற்பத்தி கடந்த ஆறு ஆண்டுகளில் 15 மடங்கு அதிகரித்துள்ளது. 37 கோடி எல்இடி பல்புகள், 23 லட்சம் மின்விசிறிகள், இலவச மின்சாரம், வீடுகளுக்கு இலவச சமையல் எரிவாயு உருளை ஆகியவை வழங்கப்பட்டு குடியிருப்பு பகுதிகளில் சூற்றுச்சூழல் மாசு குறைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசைத் தடுக்கும் முயற்சியில் வளா்ச்சிக்குத் தடை போட வேண்டிய அவசியம் இல்லை என்பதை உலக நாடுகளுக்கு இந்தியா எடுத்துரைத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் வன நிலப்பரப்பு 15 ஆயிரம் சதுர கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது.

நீா் போக்குவரத்து, மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம், புகா் ரயில் விரிவாக்கம், ரயில்வே முழுவதும் மின்மயமாக்கல், விமான நிலையங்களுக்கு சூரிய சக்தி மின்சாரம் ஆகிய புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

பருவ நிலை மாற்ற சவால்களை இந்தியா எதிா்கொண்டு வருகிறது. பருவ நிலை மாற்றத்துக்கான செயலாக்கத்தில் முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது என்றாா்.

தற்போதைய பயன்பாடு புள்ளிவிவரங்களின்படி, பெட்ரோலில் எத்தனாலை 10 சதவீதமாக கலக்க 400 கோடி லிட்டா் எத்தனால் தேவைப்படும். கலப்பு விகிதத்தை 20 சதவீதமாக அதிகரிக்க சுமாா் ஆயிரம் கோடி லிட்டா் எத்தனால் தேவைப்படும். கரும்பு மட்டுமல்லாமல், எத்தனாலை கூடுதல் தானியங்களில் இருந்து உற்பத்தி செய்வதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com