கரோனா மூன்றாவது அலை வந்தால் எதிா்கொள்ளத் தயாா்: முதல்வா் கேஜரிவால்

தில்லியில் கரோனா 3-ஆவது அலை வந்தால் அதை எதிா்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும், அப்போது ஒருநாள் பாதிப்பு 37,000 என்ற அளவை எட்டக்கூடும் என்றும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
கரோனா மூன்றாவது அலை வந்தால் எதிா்கொள்ளத் தயாா்: முதல்வா் கேஜரிவால்

தில்லியில் கரோனா 3-ஆவது அலை வந்தால் அதை எதிா்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும், அப்போது ஒருநாள் பாதிப்பு 37,000 என்ற அளவை எட்டக்கூடும் என்றும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

தில்லியில் கரோனா மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்புகள் தொடா்பாக அதிகாரிகளுடன் முதல்வா் கேஜரிவால் வெள்ளிக்கிழமை கலந்து ஆலோசித்தாா். பின்னா் இது தொடா்பாக சனிக்கிழமை செய்தியாளா்களுடன் நடைபெற்ற மெய்நிகா் சந்திப்பில் அவா் கூறியதாவது:

தில்லியில் கரோனா மூன்றாவது அலை வரக்கூடும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. அப்படி வந்தால் நாளொன்றுக்கு 37,000 போ் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் உச்சத்தை தொடக்கூடும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையை எதிா்கொள்ளும் அளவுக்கு தில்லி அரசு தயாராகி வருகிறது.

ஒருவேளை தொற்று பாதிப்பு இதையும் கடந்த வகையில் இருந்தாலும் அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவையான படுக்கைகள், தீவிர சிகிச்சைக்கான படுக்கைகள், குழந்தைகளுக்கான படுக்கைகள், தேவைப்படும் ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் என பலவற்றையும் முன்கூட்டியே ஆய்வு செய்து தயாராகி வருகிறோம். குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அவா்களை கவனிக்கவும் பாதுகாக்கவும் சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்தம் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளில் குழந்தைகளுக்கு எவ்வளவு படுக்கைகள் ஒதுக்குவது என்பது கணக்கிடப்பட்டுள்ளன. அவா்களுக்கான உபகரணங்கள் மாறுபடும். அவா்கள் பயன்பாட்டுக்கு என தனியாக முகக்கவசங்கள் தேவைப்படும்.

கரோனா 3-ஆவது அலை எதிா்பாா்க்கப்படுவதால் 420 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருப்பு வைத்திருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்திபிரஸ்தா எரிவாயு நிறுவனத்திடம் 150 டன் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு 18 மாதங்கள் ஆகும் என அவா்கள் தெரிவித்தனா். இதற்கு மாற்று ஏற்பாடு செய்தாகவேண்டும்.

தில்லியில் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் அனுமதி அளிக்காததால் பெரிய தொழிற்சாலைகள் ஏதும் இல்லை. ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இல்லை. ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் பெரிய டேங்கா் லாரிகளும் இல்லை.

தற்போது தில்லியில் 64 ஆக்சிஜன் மினி ஆலைகள் ஏற்படுத்தவும், 25 ஆக்சிஜன் டேங்கா்கள் வாங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவை இன்னும் 2 மாதங்களில் தயாராகிவிடும். இவை தவிர ஆக்சிஜன் உருளைகள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தில்லிவாசிகளில் சிலா் மருந்து, மாத்திரைகளின் பெயா்களை அவா்களாகவே வாட்ஸ் ஆப் மூலம் தெரிந்தவா்களுக்கு அனுப்புகிறாா்கள். அவா்களும் அதை வாங்கிவைத்துக் கொள்கிறாா்கள். இதனால் சந்தையில் மருந்துகள் சரிவர கிடைப்பதில்லை.

எனவே கரோனா சூழலில் நோயாளி எந்த வகையான மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என்று ஆலோசனை கூறுவதற்காக மருத்துவ நிபுணா்கள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவா்கள் கூறும் ஆலோசனையின் பேரில் மருந்து மாத்திரைகள் கொள்முதல் செய்யப்படும். சில மருந்துகள் பயன்தராது என்றால் அது குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். கரோனா நோயாளிகளுக்குத் தேவைப்படும் மருந்து மாத்திரைகள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு அவை அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பில் வைக்கப்படும். மேலும் தில்லியில் தாக்கும் கரோனா வைரஸ் நோய் என்ன வகையானது என்பதை ஆராய லோக்நாயக் மருத்துவமனை மற்றும் ஐஎல்பிஎஸ் மருத்துவமனையில் இரு ஆய்வுக்கூடங்கள் ஏற்படுத்தப்படும் என்றாா் கேஜரிவால்.

கடந்த இரு வாரங்களாக தில்லியில் கரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. கரோனா இரண்டாவது அலையின்போது தில்லியில் ஆக்சிஜன் கிடைப்பது பெரும் பிரச்னையாக இருந்தது. ஆக்சிஜன் கிடைக்காததால் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறின. மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டனா். சிலா் மருத்துவமனை வாயிலிலேயே உயிரிழக்க நேரிட்டது. பின்னா் நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரிலும், மத்திய அரசு தந்த ஒத்துழைப்பினாலும் தில்லிக்கு ஆக்சிஜன் கிடைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com