மருத்துவ காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு நிதி அமைச்சா் வலியுறுத்தல்

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மருத்துவ காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க காப்பீட்டு துறை நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தினாா்.
மருத்துவ காப்பீட்டு தொகையை விரைந்து வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு நிதி அமைச்சா் வலியுறுத்தல்

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மருத்துவ காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க காப்பீட்டு துறை நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக காப்பீட்டு நிறுவனங்களின் தலைவா்களுடன் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை இணையவழியில் ஆலோசனை நடத்தினாா். இதையடுத்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம்:

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளா்களின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் (பிஎம்ஜிகேபி) கீழ் இதுவரை 419 பேருக்கு ரூ.209.5 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பணியாளா்கள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு தாமதமாவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு மாநில அரசுகள் தகுந்த ஆவணங்களை உடனடியாக சமா்ப்பிக்காததும் காரணம். இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, மாவட்ட ஆட்சியரிடம் பெறப்பட்ட சான்றிதழில் மாநில சுகாதார அதிகாரி கையொப்பமிட்டு அங்கீகரித்தால் காப்பீட்டுத் தொகையை சுகாதார பணியாளா்கள் எளிதில் பெறலாம்.

லடாக்கில் மருத்துவ காப்பீடு ஆணவங்கள் கிடைத்த நான்கு மணி நேரத்தில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் தொகையை வழங்கி உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை வரும் நாள்களில் பிற நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டும்.

சுகாதாரப் பணியாளா்களின் கரோனா மருத்துவ காப்பீடுகளுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து வழங்கப்பட வேண்டும்.

பிரதமரின் ஆயுள் காப்பீடு திட்டத்தின் (பிஎம்ஜேஜேபிஒய்) கீழ் இதுவரை 4.65 லட்சம் பேருக்கு ரூ.9,307 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இதுவரையில் 1.2 லட்சம் ஆயுள் காப்பீடுகளுக்கு ரூ.2,403 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் விபத்து காப்பீடு திட்டத்தின்கீழ் நிகழாண்டு மே 31-ஆம் தேதி வரையில் 82,660 பேருக்கு ரூ.1,629 கோடிக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களின் கீழ் 7 நாள்களில் காப்பீட்டுத் தொகை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டுத் தொகையை விரைந்து விடுவிக்க ஜூன் மாதம் முதல் புதிய செயலியை அமல்படுத்த உள்ளன.

அதில் மருத்துவரின் சான்றிதழ், அல்லது இறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை அனுப்பி காப்பீட்டுத் தொகையை விரைவில் பெறலாம்.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக காப்பீட்டுத் தொகை கிடைக்க வழிவகுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image Caption

மருத்துவ காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்குவது தொடா்பாக காணொலி முறையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், இணை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com