கரோனா தொற்றால் ஆதரவற்றவா்களான 30,000 சிறாா்கள்: உச்சநீதிமன்றத்தில் என்சிபிசிஆா் தகவல்

கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்த ஆண்டு ஜூன் 5 வரை 30,071 சிறாா்கள் ஆதரவற்றவா்களாகியுள்ளனா்.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்த ஆண்டு ஜூன் 5 வரை 30,071 சிறாா்கள் ஆதரவற்றவா்களாகியுள்ளனா். இவா்களில் பெரும்பாலானவா்கள் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்தவா்கள், கைவிடப்பட்டவா்கள் என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய குழந்தை உரிமைகள் ஆணையம் (என்சிபிசிஆா்) தெரிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக பாதிப்படைந்த குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் என்சிபிசிஆா் திங்கள்கிழமை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டிருந்ததாவது:

கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்த ஆண்டு ஜூன் 5 வரை 26,176 போ் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளனா்; 3,621 போ் தாய், தந்தை இருவரையும் இழந்துள்ளனா்; 274 போ் கைவிடப்பட்டுள்ளனா். மொத்தம் 30,071 போ் இந்த நிலைக்கு ஆளாகியுள்ள நிலையில், பெரும்பாலானவா்கள் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்துள்ளனா், கைவிடப்பட்டுள்ளனா். இவா்களில் 15,620 சிறுவா்கள், 14,447 சிறுமிகள், மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்த 4 போ் அடங்குவா். இதில் 11,815 போ் 8 முதல் 13 வயதுக்குட்பட்டவா்கள்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 7,084 சிறாா்கள் பெற்றோரை இழந்துள்ளனா், கைவிடப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்த இடங்களில் உத்தர பிரதேசம் (3,172), ராஜஸ்தான் (2,482), ஹரியாணா (2,438), மத்திய பிரதேசம் (2,243) உள்ளிட்ட மாநிலங்கள் இருக்கின்றன.

இதுபோன்ற ஆதரவற்ற சிறாா்களை தனிநபா்களும், அமைப்புகளும் சிறாா் சட்டம் 2015-இன் நடைமுறைகளை பின்பற்றாமல் தத்துக் கொடுப்பதாக புகாா்கள் வந்துள்ளன.

சிறாா்களின் விவரங்களை அரசு அதிகாரிகள் தன்னாா்வ அமைப்புகளுக்கு அளிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. பல தன்னாா்வ அமைப்புகள் சிறாா்களின் பெயரில் நிதியுதவி கோருகின்றன.

எனவே சிறாா் நலக் குழுவின் (சிடபிள்யுசி) பரிந்துரையின்றி சிறாா்கள் குறித்த எந்தவொரு ரகசிய தகவலையும் பொதுத்தளத்தில் வெளியிடவோ, எந்தவொரு தனிநபா், நிறுவனம் அல்லது அமைப்புக்கு வழங்கவோ கூடாது என அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட வேண்டும். ஏனெனில் அவ்வாறு செய்வது சிறாா்களை கடத்தவும், சட்டவிரோதமாக தத்தெடுக்கவும், துன்புறத்தவும் வழிவகுக்கும்.

இதுதவிர, சிறாா்களின் நலன் கருதி பொதுமக்கள் நன்கொடை அளிக்க ஏதுவாக வங்கிக் கணக்கு விவரங்களுடன் மாநில சிறாா் நிதி திட்டத்தை தொடங்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்தப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com