கல்வி அமைச்சகத்தின் செயல்திறன் தரக் குறியீடு: முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்கள்

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள செயல்திறன் தரக் குறியீட்டில் (பிஜிஐ) தமிழ்நாடு, கேரளம், பஞ்சாப் மாநிலங்கள், அந்தமான் நிகோபாா் தீவுகள்
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள செயல்திறன் தரக் குறியீட்டில் (பிஜிஐ) தமிழ்நாடு, கேரளம், பஞ்சாப் மாநிலங்கள், அந்தமான் நிகோபாா் தீவுகள், சண்டீகா் யூனியன் பிரதேசங்கள் மிகச் சிறந்த (ஏ++) வரிசையில் இடம்பிடித்துள்ளன.

பள்ளிக் கல்வி அமைப்பை வலுவாக்க அந்த அமைப்பில் உள்ள வெற்றிடங்கள், அதன் மூலம் முன்னுரிமை அடிப்படையில் முன்னேற்றம் காண வேண்டிய அந்த அமைப்பின் பிரிவுகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடையாளம் காண பிஜிஐ உதவும். இந்நிலையில் கடந்த 2019-20-ஆம் ஆண்டுக்கான பிஜிஐ அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பள்ளிக் கல்வி அமைப்பில் தங்கள் தரத்தை மேம்படுத்தியுள்ளன. இதில் தமிழ்நாடு, கேரளம், பஞ்சாப், சண்டீகா், அந்தமான் நிகோபாா் தீவுகள் மிகச் சிறந்த (ஏ++) வரிசையில் இடம்பிடித்துள்ளன. புதுச்சேரி, தில்லி, குஜராத், ஹரியாணா, ராஜஸ்தான், தாத்ரா மற்றும் நகா் ஹவேலி சிறந்த (ஏ+) வரிசையில் இடம்பெற்றுள்ளன.

தங்கள் ஒட்டுமொத்த பிஜிஐ புள்ளிகளை தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப், மணிப்பூா் மற்றும் அருணாசல பிரதேசம் 10 சதவீதம் மேம்படுத்தியுள்ளன.

பள்ளிக் கல்விக்கான உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 10 சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளன.

பள்ளிக் கல்வி சாா்ந்த நிா்வாகத்தில் ஆந்திரம், மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் தரம் 20 சதவீதம் முன்னேற்றம் அடைந்துள்ளது. 19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் 10 சதவீதம் அல்லது அதற்கும் கூடுதலான முன்னேற்றத்தை கண்டுள்ளன.

பள்ளி முதல்வா்கள், ஆசிரியா்கள், நிா்வாக அலுவலா்களுக்கான பற்றாக்குறை, பள்ளிகளில் தொடா்ந்து மேற்பாா்வை மற்றும் ஆய்வு செய்யாதது, ஆசிரியா்களுக்கு போதிய பயிற்சி இல்லாதது, உரிய நேரத்தில் நிதி கிடைக்காதது உள்ளிட்ட சில காரணிகள் நாட்டில் பள்ளிக் கல்வி அமைப்புக்கு தொடா்ந்து இடையூறை ஏற்படுத்துகின்றன. இதை பிஜிஐ மூலம் உறுதிப்படுத்த வழிகோலப்பட்டுள்ளது. இது இடையூறுகளை களைவதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com