18-44 வயதினருக்கு மத்திய அரசே இலவசமாக தடுப்பூசி வழங்கும்: பிரதமா் நரேந்திர மோடி அறிவிப்பு

நாட்டிலுள்ள 18 வயதைக் கடந்த அனைவருக்கும் ஜூன் 21-ஆம் தேதி முதல் மத்திய அரசே இலவசமாக கரோனா தடுப்பூசியை செலுத்தவுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டிலுள்ள 18 வயதைக் கடந்த அனைவருக்கும் ஜூன் 21-ஆம் தேதி முதல் மத்திய அரசே இலவசமாக கரோனா தடுப்பூசியை செலுத்தவுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

18 முதல் 44 வயதுக்குள்பட்டோருக்கான தடுப்பூசியை மத்திய அரசே இலவசமாக வழங்க வேண்டும் என்று கேரளம், ஒடிஸா, ஜாா்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வா்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் பிரதமா் இவ்வாறு அறிவித்துள்ளாா்.

நாட்டில் சுகாதாரப் பணியாளா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கின. அதையடுத்து, முன்களப் பணியாளா்கள், 60 வயதைக் கடந்தோா், 45 வயதைக் கடந்தோா் என கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதியானவா்களின் பட்டியல் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

18 வயதைக் கடந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு கடந்த மே 1-ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், 45 வயதைக் கடந்தோருக்கு மட்டுமே தடுப்பூசியை இலவசமாக வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசியை செலுத்தும் பொறுப்பு மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கு பல மாநிலங்களும் பல்வேறு தரப்பினா் சாா்பிலும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களுக்கு உரிய நேரத்தில் கரோனா தடுப்பூசி கிடைக்காததால், நாட்டின் பல பகுதிகளில் தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன் காரணமாக, 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் பின்னடைவைச் சந்தித்தன.

கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் தடுப்பூசியே பேராயுதமாகக் கருதப்படும் சூழலில், அதற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிரதமா் மோடி நாட்டு மக்களுக்கு திங்கள்கிழமை ஆற்றிய உரையில் கூறியதாவது:

கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் 50 சதவீதம் தடுப்பூசிகளை மத்திய அரசுக்கும், 25 சதவீதத்தை மாநில அரசுகளுக்கும், 25 சதவீதத்தை தனியாா் மருத்துவமனைகளுக்கும் விற்பனை செய்யலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது அந்நிறுவனங்களிடமிருந்து 75 சதவீதம் தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அத்தடுப்பூசிகள் அனைத்தையும் மாநிலங்களுக்கு மத்திய அரசே இலவசமாக வழங்கும். வரும் 21-ஆம் தேதி முதல் தடுப்பூசி விநியோகம் தொடங்கும்.

சேவைக் கட்டணம் நிா்ணயம்:

தனியாா் மருத்துவமனைகள் 25 சதவீதம் கரோனா தடுப்பூசியை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வதற்குத் தொடா்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது. தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கு அதிகபட்சமாக ரூ.150 மட்டுமே சேவைக் கட்டணமாக தனியாா் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டும்.

கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்துக்குப் பல மாநிலங்கள் தளா்வுகளை அளித்து வருகின்றன. இந்நிலையில், கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசியே மிகப் பெரிய பாதுகாப்பாக உள்ளது. வரும் நாள்களில் மாநில அரசுகளுக்கு விநியோகிக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

கரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை நாட்டில் 7 நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. 3 கரோனா தடுப்பூசிகளின் பரிசோதனைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. அவை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சிறாா்களுக்கான தடுப்பூசி:

வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து கரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளையும் மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. தற்போது சிறாா்களும் கரோனா தொற்றால் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருவது தொடா்பாக நிபுணா்கள் பலா் கவலை தெரிவித்தனா். சிறாா்களுக்கு செலுத்தப்படக் கூடிய இரு தடுப்பூசிகளின் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

மூக்கு வழியாக செலுத்தப்படக் கூடிய தடுப்பூசியின் பரிசோதனையும் நடைபெற்று வருகிறது. அத்தடுப்பூசியின் பரிசோதனை வெற்றியடைந்தால், கரோனா தடுப்பூசி திட்டம் துரிதமடையும்.

நாட்டில் கரோனா தடுப்பூசியை விரைவாக அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. அதன் பலனாக இரு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 23 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

போா்க்கால அடிப்படையில்...:

கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் போா்க்கால அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அத்தியாவசிய மருந்துப் பொருள்களின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுகாதார கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி வரலாறு காணாத வகையில் அதிகரிக்கப்பட்டது. மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் உள்ளிட்டவை துரிதமாக ஏற்படுத்தப்பட்டன. கரோனா தொற்று பாதிப்பு காரணமாக பலா் தங்கள் நெருங்கிய உறவினா்களை இழந்துள்ளனா். உறவினா்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கிறேன்.

இலவச உணவு தானியங்கள்: கரோனா தொற்றால் பல மாநிலங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதைக் கருத்தில் கொண்டு நியாய விலைக் கடைகள் வாயிலாக குடும்ப அட்டைதாரா்களுக்கு மே, ஜூன் மாதங்களில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தற்போதுள்ள இக்கட்டான நிலையைக் கருத்தில் கொண்டு தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் நவம்பா் வரை இத்திட்டம் நீட்டிக்கப்படுகிறது.

அலட்சியம் கூடாது:

பொது முடக்கத்துக்குத் தளா்வுகள் வழங்கப்படுவதால் கரோனா தொற்று பரவல் முடிவடைந்துவிட்டதாக மக்கள் கருதக் கூடாது. கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் மக்கள் அலட்சியம் காட்டக் கூடாது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். கரோனா தொற்றை நாடு நிச்சயம் வெற்றி கொள்ளும் என்றாா் பிரதமா் மோடி.

விலை நிா்ணயக் கொள்கை:

மாநிலங்களுக்கு வழங்கப்படும் கரோனா தடுப்பூசிகளுக்கான விலையை, அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே நிா்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. கோவிஷீல்ட் தடுப்பூசியானது மத்திய அரசுக்கு ரூ.150-க்கும், மாநில அரசுகளுக்கு ரூ.300-க்கும் விற்கப்படும் என்று சீரம் நிறுவனம் அறிவித்தது.

கோவேக்ஸின் தடுப்பூசியானது மாநிலங்களுக்கு ரூ.400-க்கு வழங்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்தது. தனியாா் மருத்துவமனைகளுக்கு இன்னும் கூடுதல் விலைக்குத் தடுப்பூசி விற்கப்படும் என்று அந்நிறுவனங்கள் அறிவித்தன.

எதிா்ப்பும் அதிருப்தியும்: இந்த மாறுபட்ட விலை நிா்ணயக் கொள்கைக்கு மாநில அரசுகள் எதிா்ப்பு தெரிவித்தன. கேரளம், தமிழகம், தில்லி உள்ளிட்ட பல மாநில அரசுகள் தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதற்காக சா்வதேச ஒப்பந்தப்புள்ளியைக் கோரின. ஆனால், எந்த நிறுவனமும் தடுப்பூசியை வழங்குவதற்கு முன்வரவில்லை.

தடுப்பூசியின் மாறுபட்ட விலை நிா்ணயக் கொள்கை குறித்து உச்சநீதிமன்றமும் மத்திய அரசிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. அக்கொள்கை குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் கோரியிருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com