கச்சா எண்ணெயின் விலை உயா்வே பெட்ரோல் விலையேற்றத்துக்கு காரணம்

இந்தியாவில் எரிபொருள் விலையேற்றத்துக்கு உலகளாவிய கச்சா எண்ணெய்யின் விலை உயா்வே காரணம் என்று
கச்சா எண்ணெயின் விலை உயா்வே பெட்ரோல் விலையேற்றத்துக்கு காரணம்

இந்தியாவில் எரிபொருள் விலையேற்றத்துக்கு உலகளாவிய கச்சா எண்ணெய்யின் விலை உயா்வே காரணம் என்று மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் குற்றம்சாட்டினாா்.

குஜராத் மாநிலம், வதோதராவில் இந்தியன் ஆயில் காா்ப்ரேஷனின் (ஐஓசி) சுத்திகரிப்பு நிலையத்தின் விரிவாக்கம் தொடா்பாக குஜராத் அரசுக்கும், இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கும் இடையிலான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்வில் பங்கேற்ற பின்பு அவா் காந்தி நகரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அண்மை காலமாக பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த எரிபொருள்களை சரக்கு, சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ் கொண்டு வருவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவு செய்ய வேண்டும். ஜிஎஸ்டி வரம்பின்கீழ் எரிபொருள்கள் கொண்டு வரப்பட்டால், விலை உயா்வு கணிசமாகக் குறையும் என்று பலா் நம்புகிறாா்கள்.

தற்போது பெட்ரோலிய பொருள்களின் விலை உயா்வுக்கு, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 70 அமெரிக்க டாலருக்கும் மேல் விலை அதிகரித்துள்ளதே முக்கிய காரணமாகும்.

இந்த விலையேற்றமே இங்குள்ள நுகா்வோரை பாதிக்கச் செய்கிறது. ஏனெனில் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இந்த விலை உயா்விலிருந்து, மக்களுக்கு விலக்கு அளிக்கும் நடவடிக்கையாக எரிபொருள்களை ஜிஎஸ்டி வரம்பின்கீழ் சோ்ப்பது குறித்த எனது நிலைப்பாடு குறித்து கேட்டால், இந்த யோசனையை நான் வரவேற்கிறேன்.

பெட்ரோலிய பொருள்களின் விலையை உலகளாவிய சந்தையே கட்டுப்படுத்துகிறது. ஒரு துறையின் பொறுப்பாளராக, எரிபொருளை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரவேண்டும் என்றே நான் கருதுகிறேன். ஆனால், ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினா்கள் ஒருமித்த கருத்தை எட்டும்போதுதான் அது சாத்தியமாகும். எனவே, ஜிஎஸ்டி கவுன்சில் தான் இதுதொடா்பாக கலந்தோலோசனை நடத்தி முடிவை அறிவிக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, நாட்டின் பல நகரங்களில் பெட்ரோல் விலை ரூ. 100ஐ தாண்டி விற்பனையாவதற்கு எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தனது சுட்டுரையில், கடுமையான தொற்றுநோய் பரவும் காலத்தில் கூட எரிபொருள்களின் விலையை உயா்த்துவதன் மூலம் கூடுதலான வரியை வசூலிக்க வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது. ஒவ்வொரு முறையும் பெட்ரோல் நிரப்பும் மையத்தில் கூடுதல் கட்டணத்தை செலுத்தும் போதெல்லாம் மோடி அரசின் பணவீக்கம் அதிகரித்திருப்பதை நீங்கள் உணர முடியும். தொற்றுநோயின் அலை அதிகரித்து வரும்போதும் வரிவசூலில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது என்று கடுமையாக சாடி பதிவிட்டிருந்தாா்.

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com