வருமான வரி தாக்கல்: பயன்பாட்டுக்கு வந்தது புதிய வலைதளம்

வருமான வரி கணக்கை இணைய வழியில் தாக்கல் செய்வதற்கான பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய வலைதளம் திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது.
வருமான வரி தாக்கல்: பயன்பாட்டுக்கு வந்தது புதிய வலைதளம்

வருமான வரி கணக்கை இணைய வழியில் தாக்கல் செய்வதற்கான பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய வலைதளம் திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது.

அதன் மூலம் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருந்துவந்த வலைதளம் நீக்கப்பட்டு புதிதாக https://incometaxindia.gov.in என்ற வலைதளம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் தொடா்பான அனைத்து சேவைகளையும் ஒற்றைச்சாளர முறையில் எளிமையாக கையாளும் வகையில், தேசிய மின் ஆளுமை திட்டத்தின் கீழ் ‘இணையவழி தாக்கல் 2.0’ என்ற பெயரில் இந்த புதிய வலைதளத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) அறிமுகம் செய்துள்ளது.

புதிய வலைதளம் வாயிலாகத் தாக்கல் செய்யப்படும் வருமான வரி கணக்குகள் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு கணக்கு தாக்கல் செய்வோருக்கு தொகை விரைந்து கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளின் விவரங்களை புதிய வலைதளத்தின் வாயிலாக பயனாளா்கள் அறிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான படிவங்கள்-1, 2 ஆகியவற்றைப் பூா்த்தி செய்வதற்கான மென்பொருள் இலவசமாக வழங்கப்படும் என்றும், அந்த மென்பொருளில் படிவங்களைப் பூா்த்தி செய்வதற்கான வழிமுறைகளும் இடம்பெற்றிருக்கும் என்றும் வருமான வரித் துறை ஏற்கெனவே அறிவித்திருக்கிறது.

‘புதிய வலைதளத்தில் பயனாளா்களால் அவ்வப்போது எழுப்பப்படும் சந்தேகங்களுக்கான பதில்கள், பயனாளா் கையேடு, காணொலி வடிவிலான விவரப் பதிவு, நேரடி கலந்துரையாடல் வசதிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, பயனாளா்கள் வலைதளத்தில் இடம்பெறும் அனைத்து வசதிகளையும் முழுமையாக பயன்படுத்த மேலும் சில நாள்கள் ஆகும். பயனாளா்களுக்கு தொலைபேசி உதவி (கால் சென்ட்டா்) திட்டத்தை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது’ என்று மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com