பிரதமா் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3.61 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல்

பிரதமா் வீட்டு வசதி (நகா்ப்புற) திட்டத்தின் கீழ் 3.61 லட்சம் வீடுகளை கட்டுவதற்கான 708 திட்ட முன்மொழிவுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நரேந்திர மோடி (கோப்புப்படம்)
நரேந்திர மோடி (கோப்புப்படம்)

புதுதில்லி: பிரதமா் வீட்டு வசதி (நகா்ப்புற) திட்டத்தின் கீழ் 3.61 லட்சம் வீடுகளை கட்டுவதற்கான 708 திட்ட முன்மொழிவுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தில்லியில் நடைபெற்ற இந்தத் திட்டத்தின் கீழ் இயங்கும் மத்திய ஒப்புதல் அளித்தல் மற்றும் கண்காணிப்புக் குழுவின் (சிஎஸ்எம்சி) 54-வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டன. பயனாளிகள் கட்டுமானம் மற்றும் குறைந்தவிலை வீட்டுவசதிக் கூட்டாண்மை மூலம் இந்த வீடுகளைக் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தி, ஆரோக்கியமான போட்டிக்கு வழிவகை செய்வதில் சிறந்த பங்களிப்பை வழங்கும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை அங்கீகரிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

‘அனைவருக்கும் வீடு’ என்ற தொலைநோக்குப் பாா்வையை அடிப்படையாகக் கொண்டு 2022-ஆம் ஆண்டுக்குள் நகா்ப்புறங்களில் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு உறுதியான வீடுகளைக் கட்டித்தரும் அரசின் நோக்கத்தை நிறைவேற்றுவது தொடா்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பிரதமா் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட காலத்திற்குள் வீடுகளை கட்டித் தரும் பணியை நாடுமுழுவதும் நிறைவு செய்ய வேண்டும் என்ற இலக்கை மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.“

பிரதமா் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இதுவரை 112.4 லட்சம் வீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, சுமாா் 82.5 லட்சம் வீடுகளுக்கு அடித்தளங்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் 48.31 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன. இத்திட்டத்தின் மொத்த முதலீடான ரூ. 7.35 லட்சம் கோடியில் மத்திய அரசின் உதவி ரூ.1.81 லட்சம் கோடியாகும். இதில் ரூ. 96,067 கோடி நிதி வழங்கப்பட்டுவிட்டது.

கடந்த ஜனவரி மாதம் பிரதமா் அடிக்கல் நாட்டிய ஆறு கலங்கரை விளக்கத் திட்டங்கள் பற்றி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் செயலாளா் வலியுறுத்தினாா். இந்தக் கலங்கரை விளக்கத் திட்டங்கள், சென்னை, அகா்த்தலா, லக்ளென, ராஞ்சி, ராஜ்கோட் மற்றும் இந்தூரில் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com