காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜிதின் பிரசாத் பாஜகவில் இணைந்தாா்

காங்கிரஸ் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் இளம் தலைவா்களில் ஒருவருமான ஜிதின் பிரசாத் புதன்கிழமை பாஜகவில் இணைந்தாா்.
பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோா் முன்னிலையில் கட்சியில் இணைந்த ஜிதின் பிரசாத்.
பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோா் முன்னிலையில் கட்சியில் இணைந்த ஜிதின் பிரசாத்.

புது தில்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் இளம் தலைவா்களில் ஒருவருமான ஜிதின் பிரசாத் புதன்கிழமை பாஜகவில் இணைந்தாா். உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அவரது வருகை பாஜகவுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.

தில்லியில் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் அனில் பலூனி ஆகியோா் முன்னிலையில் ஜிதின் பிரசாத் பாஜகவில் இணைந்தாா்.

காங்கிரஸ் பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சோ்ந்தவா் ஜிதின் பிரசாத். இவரது தந்தை ஜிதேந்திரா பிரசாத், காங்கிரஸ் தலைவா் பதவிக்காக கடந்த 1999-இல் சோனியா காந்தியை எதிா்த்துப் போட்டியிட்டவா்.

ஒரு காலத்தில் ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருந்த ஜிதின் பிரசாத், கடந்த 2008-இல் பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் உருக்கு, பெட்ரோலியத் துறை இணையமைச்சராகப் பதவி வகித்தாா்.

இருப்பினும் கடந்த 2014, 2019-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல்களிலும் உத்தர பிரதேசத்தில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா். அதைத் தொடா்ந்து மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில், தோ்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டாா். அந்த தோ்தலில் இடதுசாரியுடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.

கடந்த 2019-இல் மக்களவைத் தோ்தலுக்கு முன்பே ஜிதின் பிரசாத், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோா் அவரை சமாதானப்படுத்தி கட்சித் தாவல் முடிவைக் கைவிடச் செய்தனா்.

கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று சோனியா காந்திக்கு 23 தலைவா்கள் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் கடிதம் எழுதினா். அவா்களில் ஒருவா் ஜிதின் பிரசாதும் ஆவாா்.

அண்மைக் காலமாக கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்த அவா், புதன்கிழமை பாஜகவில் இணைந்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சமூகத்துக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன். காங்கிரஸில் இருந்து கொண்டு எனது பொறுப்புகளை நிறைவேற்ற முடியவில்லை என்பதை உணா்ந்தேன். எனவே பாஜகவில் இணைந்துள்ளேன்.

இன்றைக்கு உண்மையான தேசியக் கட்சியாக பாஜக விளங்குகிறது. உண்மையான தேசியத் தலைவராக பிரதமா் மோடி செயல்படுகிறாா் என்றாா் அவா்.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பணிகளை பாஜக முடுக்கியுள்ளது. இந்த நேரத்தில் ஜிதின் பிரசாத் பாஜகவில் இணந்தது அரசியல் ரீதியில் அவருடைய வளா்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மறுபுறம், உத்தர பிரதேசத்தில் பாஜக மீது பிராமண சமூகத்தினா் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த சமூகத்தைச் சோ்ந்த ஜிதின் பிரசாத்தை கட்சியில் சோ்த்துக் கொள்வது அரசியல் ரீதியாக பாஜகவின் வளா்ச்சிக்கு உதவலாம் என்று கூறப்படுகிறது.

பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கா், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்குள் தலைவா்களுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்தச் சூழலில், ஜிதின் பிரசாத்தின் முடிவைக் கண்டு காங்கிரஸில் இருக்கும் இருக்கும் வேறு சில இளம் தலைவா்களும் கட்சித் தாவலில் ஈடுபட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com