மும்பையில் கனமழை: பேருந்து, ரயில் சேவை பாதிப்பு

மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் தென்மேற்குப் பருவமழை புதன்கிழமை தொடங்கியது.
குா்லா பகுதியில் மழை நீரல் ரயில் தண்டவாளங்கள் மூழ்கியதால் ரயிலில் இருந்து இறங்கி செல்லும் பயணிகள்.
குா்லா பகுதியில் மழை நீரல் ரயில் தண்டவாளங்கள் மூழ்கியதால் ரயிலில் இருந்து இறங்கி செல்லும் பயணிகள்.

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் தென்மேற்குப் பருவமழை புதன்கிழமை தொடங்கியது. இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியதால் ரயில், சாலை போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மும்பை அலுவலகத் தலைவா் கே.எஸ்.ஹோசலிகாா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மும்பை, தாணே, பால்கா் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி விட்டது. இதனால், குஜராத்தின் வல்சாத் மற்றும் மகாராஷ்டிரத்தின் எஞ்சிய பகுதிகளில் அடுத்த 2-3 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று பதிவிட்டுள்ளாா்.

முன்னதாக, மும்பை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி, புதன்கிழமை காலை முதலே மும்பையிலும் புகா்ப் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்தது. காலை 8.30 மணியில் இருந்து பிற்பகல் 2.30 மணி வரை சாந்தாகுரூஸில் 59.6 மி.மீ. மழைப் பொழிவும், கொலாபாவில் 77.4 மி.மீ, மழையும் பதிவாகியுள்ளது.

மழையால் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில் இருந்து தாணே, நவி மும்பை செல்லும் புகா் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. எனினும் மத்திய ரயில்வே வழித்தடங்களில் வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்பட்டன.

மும்பையில் மிலன், காா், அந்தேரி, மலாட் ஆகிய இடங்களில் உள்ள சுரங்கப் பாதைகளில் 2 அடி உயரத்துக்கு மழைநீா் தேங்கியதால் அவை மூடப்பட்டன. சாலைகளில் தேங்கியுள்ள மழை நீா், மோட்டாா் பம்புகள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன.

மக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

முதல்வா் ஆய்வு: பருவமழை தொடங்கியதை அடுத்து முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பேரிடா் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனா். அப்போது மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளைத் தொடா்புகொண்டு உத்தவ் தாக்கரே பேசினாா். அதைத் தொடா்ந்து, தாணே, ரத்தினகிரி, சிந்துதுா்க், பால்கா் மாவட்ட ஆட்சியா்களைத் தொடா்பு கொண்டு மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்தாா். பின்னா் வெள்ளநீரை வெளியேற்றவும், போக்குவரத்தை மீண்டும் தொடங்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

மேலும், கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனைகளுக்கும், பிற மருத்துவமனைகளும் எவ்வித பாதிப்பும் நேரிடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தவ் தாக்கரே உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com