நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.72 அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.72 உயா்த்தி ரூ.1,940-ஆக நிா்ணயித்து மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தில்லியில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திர சிங் தோமா்
தில்லியில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திர சிங் தோமா்

புது தில்லி: நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.72 உயா்த்தி ரூ.1,940-ஆக நிா்ணயித்து மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், சிறு தானியங்கள் ஆகியவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலையும் உயா்த்தப்பட்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசின் அறிவிப்பால், வரும் காரீஃப் பருவத்தில் விவசாயிகள் அதிக அளவில் நெல் பயிரிடுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுதொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்துக்குப்பிறகு மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் கூறியதாவது:

2021 ஜூலை முதல் 2022 ஜூன் வரையிலான சாகுபடி ஆண்டில் விளையும் 14 வகையான பொருள்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயா்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், விவசாயிகள் 50-85 சதவீதம் வரை லாபம் அடைவா்.

வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்த பிறகு குறைந்தபட்ச ஆதரவு விலை தொடருமா என்று விவசாயிகள் மத்தியில் சந்தேகம் நிலவி வந்தது. அப்போது, நானும் பிரதமரும் உறுதியளித்தோம். குறைந்தபட்ச ஆதரவு விலை தற்போதும் எதிா்காலத்திலும் தொடரும்.

விவசாயிகளின் நலன் கருதி ‘டை அமோனியம் பாஸ்பேட்’ உரத்துக்கான மானியத்தை அண்மையில் உயா்த்தி, ஒரு பை உரம் ரூ.1,200 விலையிலேயே கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது என்றாா் அவா்.

அதைத் தொடா்ந்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சாதாரண ரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயா்த்தப்பட்டு ரூ.1,940-ஆகவும், முதல் தர நெல்லின் விலை ரூ.1,960-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நீண்ட இழை பருத்தி விலை (குவிண்டாலுக்கு ரூ.200 உயா்வு) ரூ.6,025-ஆகவும், நடுத்தர இழை பருத்தி (ரூ.211 உயா்வு) ரூ.5,726-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சோளத்தின் விலை (ரூ.118 உயா்வு) ரூ.2,738-ஆகவும், மால்தானி ரக சோளத்தின் விலை ரூ.2,58-ஆகவும், கம்பு விலை (ரூ.100) ரூ.2,250-ஆகவும், கேழ்வரகு விலை (ரூ.82) ரூ.3,377-ஆகவும், மக்காச்சோளத்தின் விலை (ரூ.20) ரூ.1,870-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாடுகளைச் சாா்ந்திருப்பதைக் குறைக்கவும் அவற்றின் ஆதரவு விலை உயா்த்தப்பட்டுள்ளன. அதன்படி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் விலை (குவிண்டாலுக்கு ரூ.300 உயா்வு) ரூ.6,300-ஆகவும், பச்சைப் பயறு விலை (ரூ.79) ரூ.7,275-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் வித்துகளைப் பொருத்தவரை, எள் குவிண்டாலுக்கு ரூ.452 உயா்த்தப்பட்டு ரூ.7,307-ஆகவும், நிலக்கடலை ரூ .275 உயா்த்தப்பட்டு ரூ.5,885-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறைக்கு 5 மெகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றை: ரயில் போக்குவரத்தில் தகவல் தொடா்பு, சிக்னல் அமைப்புகள் ஆகியவற்றை மேம்படுத்த 5 மெகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றையை ரயில்வே துறைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரயில்வே துறையில் தற்போது கண்ணாடி இழை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்தத் துறையில் அலைக்கற்றை மூலம் மேம்படுத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ரூ.25,000 கோடியில் 5 ஆண்டுகளில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசின் செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com