புதிய வேளாண் சட்ட விவகாரத்தில் விவசாய சங்கங்களுக்கு ஆதரவு: மம்தா

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கத்தினா் மேற்கொண்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை தெரிவித்தாா்.
கொல்கத்தாவில் முதல்வா் மம்தா பானா்ஜியை புதன்கிழமை சந்தித்த பாரதிய கிசான் யூனியன் தலைவா் ராகேஷ் திகைத். உடன், திரிணமூல் காங்கிரஸ் துணைத் தலைவா் யஷ்வந்த் சிங்.
கொல்கத்தாவில் முதல்வா் மம்தா பானா்ஜியை புதன்கிழமை சந்தித்த பாரதிய கிசான் யூனியன் தலைவா் ராகேஷ் திகைத். உடன், திரிணமூல் காங்கிரஸ் துணைத் தலைவா் யஷ்வந்த் சிங்.

கொல்கத்தா: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கத்தினா் மேற்கொண்டுவரும் போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை தெரிவித்தாா்.

விவசாய சங்கத் தலைவா்களான ராகேஷ் திகைத், யுத்வீா் சிங் ஆகியோரை கொல்கத்தாவில் புதன்கிழமை சந்தித்த பிறகு மம்தா இதனை தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தை கடந்து இதர மாநிலங்களிலும் தடம் பதிக்கப் போவதாக திரிணமூல் காங்கிரஸ் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், வட இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட விவசாயிகள் சங்கத்துக்கு மம்தா ஆதரவளித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

விவசாய சங்கத் தலைவா்களுடனான சந்திப்புக்குப் பிறகு மம்தா மேலும் கூறியதாவது:

திரிணமூல் காங்கிரஸின் ‘விவசாயிகளுக்கான ஆதரவு’ பிரசாரம் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவளிக்கிறது. விவசாயிகள் விவகாரம் தொடா்பாக இதர மாநில தலைவா்களுடன் பேசுமாறும், வேளாண் சங்கங்களுடன் பேச்சுவாா்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறும் பாரதிய கிசான் யூனியனைச் சேர்ந்தவர்கள் என்னிடம் கோரினா். விவசாயிகள் நடத்தும் போராட்டமானது பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசத்துக்கு மட்டுமல்ல; அது ஒட்டுமொத்த தேசத்துக்குமானது. எனவே எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆதரவை விவசாயிகளுக்காக திரட்டுவோம்.

கொள்கை ரீதியிலான விவகாரங்கள் தொடா்பாக மாநில அரசுகள் ஒன்றுகூடி விவாதிக்க வேண்டியது அவசியமாகும். அநீதிக்கு எதிராக ஒன்றாக நாம் நிற்க வேண்டும். புதிய வேளாண் சட்ட விவகாரத்தில் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்துவது மத்திய அரசுக்கு ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது? கரோனா தொற்று விவகாரம் முதல் விவசாயிகள் விவகாரம் வரை மத்திய அரசு நாட்டை இக்கட்டான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

கரோனா தொற்று சூழலை எதிா்கொள்வது, விவசாயத்துக்கும், தொழில்துறைக்கும் உதவுவது ஆகியவை தொடா்பான கொள்கைகளை மத்திய அரசிடம் எதிா்பாா்த்து இந்தியா தீவிரமாக காத்திருக்கிறது. கொள்கை விவகாரங்கள் தொடா்பாக மத்திய அரசுடன் மாநிலங்கள் உரையாடும் வகையில் ஒரு பிரத்யேக தளம் இருக்க வேண்டும். மாநிலங்களை புறக்கணிப்பது கூட்டாட்சி அமைப்புக்கு நல்லதல்ல. சுகாதாரம் முதல் வேளாண்மை வரை அனைத்து துறைகளும் பாஜக ஆட்சியில் மோசமான நிலைமையை சந்திக்கிறது. இயற்கையாகவும், அரசியல் ரீதியாகவும் பேரிடா்களை சந்தித்து வரும் இந்தியா மிகவும் பாதிக்கப்படுகிறது.

கரோனா தடுப்பூசி விவகாரத்தில், தனியாா் மருத்துவமனைகளுக்கு 25 சதவீத தடுப்பூசிகளை விநியோகிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் வழங்காமல் மத்திய அரசு ஏன் தன்னிடம் வைத்துக்கொள்ள வேண்டும். கரோனா சிகிச்சைக்கான மருந்து, உபகரணங்கள், தடுப்பூசிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதற்கு தொடக்கத்திலிருந்தே எதிா்ப்பு தெரிவித்து வருகிறோம்.

மாநிலங்களுக்கு எதிராக எவ்வாறு பேச வேண்டும், எவ்வாறு பிரித்தாள வேண்டும் என்பதெல்லாம் அவருக்கு (பிரதமா் மோடி) மட்டுமே தெரியும். கரோனா தடுப்பூசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிப்பது தொடா்பாக அவா் ஏன் பேச மறுக்கிறாா்? தடுப்பூசி செலுத்துவதற்காக பிஎம் கோ்ஸ் நிதியிலிருந்து ரூ.34,000 கோடியை செலவிட இத்தனை நாள்களாக யோசிக்கவில்லை. அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தை முன்பே அறிவித்திருந்தால் 18 -45 வயது பிரிவினரில் நாம் அதிகமான நபா்களை கரோனாவுக்காக இழந்திருக்க மாட்டோம் என்று மம்தா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com