2 ராணுவ பெண் அதிகாரிகளுக்கு போர் விமானிகளாக பயிற்சி

இந்திய ராணுவத்தில் போர் ஹெலிகாப்டர் விமானிகளாக பயிற்சி பெறுவதற்காக இரு பெண் ராணுவ அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இது இந்திய ராணுவத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவாக கருதப்படுகிறது. 


புது தில்லி: இந்திய ராணுவத்தில் போர் ஹெலிகாப்டர் விமானிகளாக பயிற்சி பெறுவதற்காக இரு பெண் ராணுவ அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது இந்திய ராணுவத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவாக கருதப்படுகிறது. 
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது: 
தற்போதைய நிலையில் ராணுவத்தின் விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் களப் பணிகளில் தான் பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், பெண்களை விமானிகளாக சேர்ப்பதற்கு ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே 6 மாதங்களுக்கு முன் ஒப்புதல் வழங்கினார். அதன்படி தற்போது இரு பெண்கள் போர் விமானிகளாக பயிற்சி பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
போர் ஹெலிகாப்டர் விமானிகளாக பயிற்சி பெறுவதற்கு 15 பெண் அதிகாரிகள் விருப்பம் தெரிவித்த நிலையில், கடுமையான தேர்வு நடவடிக்கைகளுக்குப் பிறகு இருவர் இறுதி செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ராணுவத்தின் போர் விமான பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறுவர். பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த பிறகு அடுத்த ஆண்டு ஜூலையில் அவர்கள் இருவரும் விமானிகளாக இணைவார்கள் என்று அந்த அதிகாரிகள் கூறினர். 
கடந்த 2018-இல், இந்திய விமானப் படை அதிகாரியான அவனி சதுர்வேதி தனியொருவராக போர் விமானத்தை இயக்கிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். அவர் "மிக்-21 பைசன்' ரக போர் விமானத்தை இயக்கினார். கடந்த ஆண்டு கடற்படை தனது டார்னியர் ரக விமானத்துக்கு பெண் விமானிகளை அறிவித்தது. 2019-இல் ராணுவம் தனது மிலிட்டரி போலீஸ் பிரிவில் பெண்களை இணைக்கும் நடவடிக்கையை தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com