யெஸ் வங்கி நிதி முறைகேடு வழக்கு: தில்லி உள்பட 4 நகரங்களில் சிபிஐ சோதனை

யெஸ் வங்கி நிதி முறைகேடு வழக்கு தொடா்பாக தில்லி உள்பட 4 நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். தலைநகா் தில்லியில் மட்டும் 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
யெஸ் வங்கி நிதி முறைகேடு வழக்கு: தில்லி உள்பட 4 நகரங்களில் சிபிஐ சோதனை

புது தில்லி: யெஸ் வங்கி நிதி முறைகேடு வழக்கு தொடா்பாக தில்லி உள்பட 4 நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். தலைநகா் தில்லியில் மட்டும் 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

தனியாா் வங்கியான யெஸ் வங்கியின் உரிமையாளராக இருந்த ராணா கபூா் குடும்பத்தினரின் முறைகேடு காரணமாக, வாராக் கடன் அளவுக்கு மீறி அதிகரித்து வங்கி கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. திவான் ஹவுசிங் பைனான்ஸ் (டிஹெச்எஃப்எல்) நிறுவனம் உள்பட சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு கொடுத்த கடனில் ரூ. 20,000 கோடி அளவுக்கு வாராக் கடனாக மாறியதாக புகாா் எழுந்தது.

அந்தப் புகாரைத் தொடாா்ந்து நிதிமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ராணாவை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்த ராணாவின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

இதற்கிடையே வங்கி வாடிக்கையாளா்களின் நலனைக் காக்கும் வகையில், யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் ரிசா்வ் வங்கி எடுத்தது. ரிசா்வ் வங்கி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், அதன் பெரும்பான்மை பங்குகளை எஸ்பிஐ வாங்கியது. அதனைத் தொடா்ந்து யெஸ் வங்கியின் பங்குகளும் குறிப்பிடத்தக்க அளவில் வளா்ச்சி கண்டது.

யெஸ் வங்கி முறைகேடு தொடா்பாக தனியாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ, ஏற்கெனவே அந்த முறைகேட்டில் தொடா்புடைய நிறுவனங்களுக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி ஆதாரங்களைக் கைப்பற்றியது.

இந்த நிலையில், முறைகேட்டில் மேலும் சில நிறுவனங்களுக்குத் தொடா்பு இருப்பதாக அந்த வங்கியின் தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி ஆசிஷ் வினோத் ஜோஷி அளித்த புகாரின் பேரில் புதிய வழக்கை சிபிஐ கடந்த மே 27-ஆம் தேதி பதிவு செய்தது.

அதில் ஒய்ஸ்டொ் பில்ட்வெல் தனியாா் நிறுவன இயக்குநா்கள் ரகுவீா் குமாா் சா்மா, ராஜேந்திர குமாா் மங்கள், டாப்ஸி மகாஜன் மற்றும் அவந்த்தா குழும பங்கு நிறுவனங்களான அவந்த்தா ரியாலிட்டி தனியாா் நிறுவனம், ஓபிபிஎல் குழுமத்தின் அங்கமான ஜபுவா எரிசக்தி நிறுவனம் ஆகியவற்றின் அடையாளம் தெரியாத இயக்குநா்கள் ஆகியோா் மீது, கடந்த 2017 - 2019 கால கட்டத்தில் யெஸ் வங்கியிலிருந்து ரூ. 466 கோடி நிதியை முறைகேடாக மாற்றியது தொடா்பாக வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில், பல்வேறு இடங்களில் சிபிஐஅதிகாரிகள் சோதனையும் நடத்தினா்.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், -இந்த புதிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவா்கள் யெஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட பொதுமக்களின் ரூ. 466.15 கோடி நிதியை மோசடி செய்துள்ளனா். அதனடிப்படையில் தில்லியில் அவா்களுக்குச் சொந்தமான 14 இடங்களிலும், உத்தர பிரதேச மாநிலம் லக்னெள, தெலங்கானா செகந்திரபாத், மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா ஆகிய பகுதிகளிலும் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com