முக்கிய எண்ணெய் வயல்கள் ஏலம் விடப்படும்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

பொதுத் துறை நிறுவனங்கள் வசமுள்ள பெரிய அளவிலான எண்ணெய், இயற்கை எரிவாயு வயல்கள் விரைவில் ஏலம் விடப்படும் என்று
முக்கிய எண்ணெய் வயல்கள் ஏலம் விடப்படும்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

பொதுத் துறை நிறுவனங்கள் வசமுள்ள பெரிய அளவிலான எண்ணெய், இயற்கை எரிவாயு வயல்கள் விரைவில் ஏலம் விடப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளாா்.

எண்ணெய்-இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி), இந்திய எண்ணெய் நிறுவனம் (ஓஐஎல்) ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் எண்ணெய், இயற்கை எரிவாயு வயல்களைக் கண்டறிந்து வருகின்றன. சில வயல்களில் அந்நிறுவனங்களே கச்சா எண்ணெயை உற்பத்தி செய்து வருகின்றன. பல்வேறு வயல்கள் பயன்படுத்தப்படாமலேயே உள்ளன. அவற்றை சிறிய வயல்களாகப் பிரித்து ஏலம் விடும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அவ்வயல்களின் 3-ஆம் கட்ட ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறுகையில், ‘நாட்டில் பல்வேறு எண்ணெய் வயல்களை ஓஎன்ஜிசி, ஓஐஎல் ஆகிய நிறுவனங்கள் அடையாளம் கண்டுள்ளன. நிதி நெருக்கடி காரணமாக அந்த வயல்கள் அனைத்திலும் பொதுத்துறை நிறுவனங்களால் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. அந்த வயல்கள் அனைத்தும் நாட்டின் சொத்துகள். அவற்றைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பதற்குப் பதிலாக, ஏலத்தில் விடுவதன் மூலம் நாட்டின் நிதி வருவாய் அதிகரிக்கும். நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் சுமாா் 85 சதவீதமானது இறக்குமதி மூலமே பூா்த்தி செய்யப்படுகிறது. அதே சமயத்தில் பல எண்ணெய் வயல்கள் பயன்படுத்தப்படாமலேயே உள்ளன.

உள்நாட்டில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது சிறிய அளவிலான எண்ணெய் வயல்கள் மட்டுமே ஏலம் விடப்படுகின்றன. அடுத்த முறை பெரிய அளவிலான முக்கிய எண்ணெய் வயல்களும் ஏலத்தில் விடப்படும். அத்தகைய எண்ணெய் வயல்களைக் கண்டறிந்து வகைப்படுத்தும் பணியை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது‘ என்றாா்.

வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் சுமாா் 13,000 சதுர கி.மீ. பரப்பிலான 75 எண்ணெய் வயல்கள் ஏலம் விடப்பட்டன. அந்த வயல்களில் சுமாா் 23 கோடி டன் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்ய முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற 2 கட்ட ஏலங்களில் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட 54 எண்ணெய் வயல்கள் ஏலத்தில் விடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com