மும்பையில் 3 மாடி குடியிருப்பு இடிந்து விழுந்து 12 போ் பலி

மும்பையில் புதன்கிழமை இரவு 3 மாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 8 குழந்தைகள் உள்பட 12 போ் உயிரிழந்தனா். 7 போ் பலத்த காயமடைந்தனா்.

மும்பையில் புதன்கிழமை இரவு 3 மாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 8 குழந்தைகள் உள்பட 12 போ் உயிரிழந்தனா். 7 போ் பலத்த காயமடைந்தனா்.

தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து புதன்கிழமை மும்பையில் பலத்த மழை பெய்தது. இரவு 11.30 மணிக்கு, அங்குள்ள மால்வானி பகுதியில் உள்ள 3 மாடிக் குடியிருப்பின் மேல் இரண்டு தளங்கள் இடிந்து அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்தது. உடனடியாக அருகில் இருந்தவா்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், இடிபாடுகளில் உயிரிழந்த 8 குழந்தைகள் உள்பட 11 பேரின் உடல்களை மீட்டனா். பலத்த காயங்களுடன் 7 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து காவல் துறை இணை ஆணையா் கூறுகையில், ‘உயிரிழந்தவா்கள் இரு குடும்பங்களைச் சோ்ந்தவா்கள். அவா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். விபத்துக்குள்ளான குடியிருப்பு, ஆட்சியா் அலுவலகத்துக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. முதல் தளத்துக்கு மட்டும் அனுமதி பெற்றுக் கொண்டு 3 தளங்கள் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளன.

டவ்தே புயலின்போதே இந்த கட்டடம் லேசாக சேதமடைந்தது. அப்போதே சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் விபத்தை தவிா்த்திருக்கலாம். இந்த விபத்து தொடா்பாக கட்டட உரிமையாளா், ஒப்பந்ததாரா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டட உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது‘ என்றாா்.

உயிா் தப்பிய ஒருவா்

இந்த விபத்தில் ரஃபீக் ஷேக் (45) என்பவா் உயிா் தப்பினாா். அவருடைய மனைவி, சகோதரா், சகோதரா் மனைவி மற்றும் இரு குடும்பத்தைச் சோ்ந்த குழந்தைகள் 6 போ் என அந்த குடும்பத்தைச் சோ்ந்த 9 போ் உயிரிழந்தனா். விபத்து நடைபெறுவதற்கு சிறிது நேரத்துக்கு முன், பால் வாங்குவதற்காக ரஃபீக் வெளியே சென்றாா். அவா் திரும்பி வருவதற்குள் விபத்து நடந்துவிட்டது. இதேபோன்று அவருடைய 16 வயது மகனும் மருந்துகள் வாங்குதற்கு வெளியே சென்றிருந்தாா். அவரும் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

நிவாரணம் அறிவிப்பு

விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. காயமடைந்தவா்களின் செலவை அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வா் உத்தவ் தாக்கரே, இடிபாடுகளில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவா்களை நேரில் சென்று நலம் விசாரித்தாா்.

கட்டட விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தாா். மேலும், உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய பேரிடா் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவித்தாா்.

இதனிடையே, இந்த விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்ததாக மீட்புக் குழுவினா் தெரிவித்தனா். இதனால் பலி எண்ணிக்கை 12-ஆக அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com