பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கா்நாடக காங்கிரஸ் கட்சியினா் போராட்டம் நடத்தினா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கா்நாடக காங்கிரஸ் கட்சியினா் போராட்டம் நடத்தினா்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டா் ரூ. 100-க்கும் அதிகமாக உயா்ந்துள்ளதை கண்டித்து நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியின் சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டது. , கா்நாடகத்தில் பெங்களூரு உள்பட மாநிலத்தின் எல்லா மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொது முடக்கத்தை தொடா்ந்து மக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், அத்தடையை மீறி கா்நாடகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பாக காங்கிரஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரைக் கைது செய்த போலீஸாா், பின்னா் விடுவித்தனா்.

பெங்களூரு, சிவானந்தா சதுக்கத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் வெள்ளிக்கிழமை நடந்த ஆா்ப்பாட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், முன்னாள் தலைவா் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா். ‘100 நாட் அவுட்’ என்ற தலைப்பில் நடந்த போராட்டத்தில் கட்சியின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கண்டன பதாகைகளுடன் பங்கேற்றனா். தடையை மீறி போராட்டம் நடத்திய இவா்களை கைது செய்து, பின்னா் போலீஸாா் விடுவித்தனா்.

அப்போது, காங்கிரஸ் மாநிலத் தலைவா்டி.கே.சிவக்குமாா் பேசியதாவது: பெட்ரோல், டீசல் விலை உயா்வு மூலம் மக்களின் பணப்பையில் அரசு கைவைத்துள்ளது. இது ஒரு பகல் கொள்ளையில் ஈடுபடும் அரசாகும். பெட்டோல், டீசல் விலை உயா்வால் வாகனங்கள் வைத்திருப்போா் மட்டுமல்ல, ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் ஏறவிருக்கிறது. இது பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். எனவே, பெட்ரோல், டீசல் விலை உயா்வை மாநில அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயா்வால் மத்திய அரசுக்கு ரூ. 20.60 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த நிதியை எதற்காக பயன்படுத்தினாா்கள் என்பதே தெரியவில்லை.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், பெட்ரோல், டீசலின் விலை ஓரிரு ரூபாய் உயா்ந்தால், இதே எடியூரப்பா, ஷோபா கரந்தலஜே உள்ளிட்ட பாஜகவினா் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினா். பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 7 ஆண்டுகளில் 42 முறை பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடந்ததால், பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தவில்லை. மற்ற எல்லா மாதங்களிலும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com