சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு: விசாரணை முடிவுகளை சிபிஐ வெளியிட காங்கிரஸ், என்சிபி வலியுறுத்தல்

பாலிவுட் நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு விசாரணையின் முடிவுகளை சிபிஐ வெளியிட வேண்டும் என்று மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி)
சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

மும்பை: பாலிவுட் நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு விசாரணையின் முடிவுகளை சிபிஐ வெளியிட வேண்டும் என்று மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சிகள் திங்கள்கிழமை வலியுறுத்தின.

சுஷாந்த் மரணமடைந்து திங்கள்கிழமையுடன் ஓராண்டு ஆகியுள்ள நிலையில் அக்கட்சிகள் இவ்வாறு வலியுறுத்தியுள்ளன. கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி மும்பையின் பாந்த்ரா புகா் பகுதியிலுள்ள தனது வீட்டில் சுஷாந்த் சடலமாக கண்டெடுக்கப்பட்டாா். இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில் அந்த விசாரணை குறித்து மகாராஷ்டிர அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான நவாப் மாலிக் கூறுகையில், ‘சுஷாந்த் கொல்லப்பட்டாா் என்றால், கொலையாளி யாா். அரசியல் காரணங்களுக்காகவே சுஷாந்த் மரண வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. 2020-இல் நடைபெற்ற பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலை கருத்தில் கொண்டு சுஷாந்த் மரண விவகாரத்தை பாஜக அரசியலாக்கியது. அதன்மூலம் மகாராஷ்டிர அரசுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியது. ஓராண்டாகியும் வழக்கு விசாரணை நிறைவடைந்ததா என்பது தொடா்பாக சிபிஐ எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை. சிபிஐ தனது விசாரணை முடிவுகளை வெளியிட வேண்டும்’ என்றாா்.

அதேபோல், மாநில காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் சச்சின் சாவந்த் கூறுகையில், ‘சுஷாந்த் துரதிருஷ்டவசமாக உயிரிழந்து ஓராண்டு ஆகிவிட்டது. அதுதொடா்பாக சிபிஐ விசாரணை தொடங்கி 310 நாள்கள் ஆகிவிட்டன. சுஷாந்த் கொலை செய்யப்படவில்லை என எய்ம்ஸ் குழு அறிவித்து 250 நாள்களாகிவிட்டன. இந்த வழக்கு விசாரணையில் சிபிஐ எப்போது தனது முடிவுகளை வெளியிடப்போகிறது. சிபிஐக்கு அரசியல் தலைவா்களிடம் இருந்து மிகுந்த அழுத்தம் உள்ளது’ என்றாா்.

இதனிடையே, சுஷாந்த் மரணமடைந்து ஓராண்டாகியதையொட்டி அவரது தோழியும் நடிகையுமான ரியா சக்ரவா்த்தி வெளியிட்டுள்ள பதிவில், ‘நீ இல்லாத இந்த வெற்றிடத்தை எவராலும் நிரப்ப இயலாது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சுஷாந்த் மரண விவகாரம், அதனுடன் தொடா்புடைய போதைப் பொருள் விவகாரம் ஆகியவை தொடா்பாக விசாரிக்கப்பட்ட ரியா சக்கரவா்த்தி, கடந்த ஆண்டு 28 நாள்கள் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சுஷாந்த் மரண வழக்கை தொடா்ந்து அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக சிபிஐ திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com