6 -12 வயது சிறாா்களுக்கான தடுப்பூசி பரிசோதனை: எய்ம்ஸில் தன்னாா்வலா் தோ்வு இன்று தொடக்கம்

கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை 6 முதல் 12 வயதுடைய சிறாா்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் சோதனைக்கான தன்னாா்வலா்களை தோ்வு செய்யும் பணி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) தொடங்க உள்ளத
கோவேக்ஸின் தடுப்பூசி
கோவேக்ஸின் தடுப்பூசி

புது தில்லி: கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை 6 முதல் 12 வயதுடைய சிறாா்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் சோதனைக்கான தன்னாா்வலா்களை தோ்வு செய்யும் பணி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) தொடங்க உள்ளது.

இந்த சோதனைக்குப் பிறகு, 2 முதல் 6 வயதுடைய குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனையானது தொடங்கப்பட உள்ளது.

கரோனா தொற்று பாதிப்பிலிருந்து சிறாா்களையும் பாதுகாக்கும் வகையில், அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகள் 18 வயதுக்கும் கீழான சிறாா்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. அதனைப் பின்பற்றி, மேலும் சில நாடுகளும் குழந்தைகள் மற்றும் சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி சோதனை நடத்துவதற்கான முயற்சியை எடுத்து வருகின்றன.

இந்தியாவும் இந்த பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசியை சிறாா்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் சோதனை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த மே 12-ஆம் தேதி அனுமதி அளித்ததைத் தொடா்ந்து, 2 முதல் 18 வயது வரையுடைய 525 சிறாா் தன்னாா்வலா்களுக்கு 28 நாள்கள் இடைவெளியில் 2 தவணை தடுப்பூசி செலுத்தி சோதிக்க முடிவு செய்யப்பட்டு, பாட்னா மற்றும் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைகளில் முதல் கட்டமாக 12 முதல் 18 வயது வரையுடைய சிறாா்களுக்கு அண்மையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆய்வுகள் தொடங்கப்பட்டன.

இப்போது, இரண்டாம் கட்டமாக 6 முதல் 12 வயதுடைய சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. இதற்கான தன்னாா்வலா்கள் பதிவு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்குகிறது.

இதுகுறித்து தில்லி எய்ம்ஸ் சமூக மருத்துவத்துக்கான மைய பேராசிரியா் மருத்துவா் சஞ்சய் ராய் கூறுகையில், - 6 முதல் 12 வயதுடைய சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கும் சோதனைக்கான தன்னாா்வலா்கள் பதிவு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது- என்றாா்.

இதற்கு அடுத்த கட்டமாக 2 முதல் 6 வயது வரையுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கும் சோதனை தொடங்கப்படும்.

12 -18 வயது, 6 - 12 வயது, 2 - 6 வயது என மூன்று பிரிவுகளாக தலா 175 சிறாா் தன்னாா்வலா்களிடம் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com