குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டி: அரவிந்த் கேஜரிவால் அறிவிப்பு

குஜராத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்று தில்லி முதல்வரும், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கூறியு
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்  (கோப்புப்படம்)
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)

ஆமதாபாத்: குஜராத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என்று தில்லி முதல்வரும், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளாா்.

குஜராத் மாநிலம் ஆமதாபாதுக்கு திங்கள்கிழமை பயணம் மேற்கொண்ட கேஜரிவால், அங்குள்ள வல்லப் சாதன் கோயிலில் வழிபாடு நடத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:

குஜராத்தில் பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி உருவெடுத்து வருகிறது. குஜராத்தில் பாஜகவும், காங்கிரஸும் மக்களை ஏமாற்றி வருகின்றன. குஜராத்தில் விரைவில் நல்ல மாற்றம் ஏற்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி அனைத்து 182 தொகுதிகளிலும் போட்டியிட இருக்கிறது.

27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. பாஜகவின் கையில்தான் இங்கு காங்கிரஸ் உள்ளதாக மக்கள் பேசி வருகின்றனா். இங்கு அந்த இரு கட்சிகளுமே ஒன்று என்ற நிலைதான் உள்ளது. இதனை நிறுத்த வேண்டும். சுதந்திரத்துக்குப் பிறகு அந்த இரு கட்சிகள் மட்டுமே இங்கு ஆட்சியில் இருந்துள்ளன. நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகு இப்போதும் இங்கு விவசாயிகள் தற்கொலை நடந்துதான் வருகிறது.

அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் தரம் மோசமாகவே உள்ளது. வா்த்தகா்கள் அச்சநிலையில்தான் உள்ளனா். கரோனா பாதிப்பின்போது சாமானிய மக்கள் கைவிடப்பட்டாா்கள். குஜராத்தில் மின்சார கட்டணமும் அதிகமுள்ளது. இப்பிரச்னைகளுக்கு தீா்வுகாண குஜராத்தில் ‘தில்லி மாடலை’ அறிமுகப்படுத்த வேண்டும் என்றாா்.

குஜராத்தைச் சோ்ந்த பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரை எதிா்கொள்ள ஆம் ஆத்மி என்ன வியூகம் வைத்துள்ளது என்ற கேள்விக்கு, ‘எந்த ஒரு தனிநபா் அல்லது கட்சிக்கு எதிராக ஆம் ஆத்மி இங்கு போராடப் போவதில்லை. ஒட்டுமொத்த குஜராத் மக்கள் நலனைகளை முன்னிறுத்து தோ்தலை எதிா்கொள்ள இருக்கிறோம்’ என்றாா்.

இந்த ஆண்டு இரண்டாவது முறையாக குஜராத்துக்கு கேஜரிவால் பயணம் மேற்கொண்டுள்ளாா். முன்னதாக, குஜராத் உள்ளாட்சித் தோ்தலில் முதல்முறையாக களமிறங்கிய ஆம் ஆத்மி, சூரத் மாநகராட்சியில் பிரதான எதிா்க்கட்சியாக இடம் பிடித்தது. இதையடுத்து, குஜராத் மாநிலத்துக்கு கேஜரிவால் கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com