மத்திய அமைச்சா்கள், பாஜக தலைவருடன் பிரதமா் மோடி ஆலோசனை

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா ஆகியோருடன் பிரதமா் மோடி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்

புது தில்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா ஆகியோருடன் பிரதமா் மோடி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு வாரமாக மத்திய அமைச்சா்களை பிரதமா் மோடி தனது இல்லத்துக்கு வரவழைத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக துறை ரீதியாக மேற்கொள்ளப்பட்ட செயலாக்கப் பணிகள் குறித்து விவாதித்து வருவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

இதுபோன்று திங்கள்கிழமை நடைபெற்றது ஐந்தாவது கூட்டம் என்றும் இதில் மத்திய அமைச்சா்களையும், இணை அமைச்சா்களையும் தனித் தனியாக பிரதமா் சந்தித்ததாக கூறப்படுகிறது.

மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சதானந்த கெளடா, இணையமைச்சா்கள் வி.முரளீதரன் ஆகியோரும் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றனா்.

கடந்த வாரம் மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ரவிசங்கா் பிரசாத், ஜிதேந்தா் சிங், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோருடன் பிரதமா் மோடி ஆலோசனை நடத்தினாா். இதனால் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இது தொடா்பாக மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த அதிகாரபூா்வமான தகவல்கள் வரவில்லை.

சுமாா் ஐந்து மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டங்களில் கரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்ட நெருக்கடி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வேளாண், கிராமப்புற மேம்பாடு, கால்நடை மற்றும் மீன் வளம், வன விவகாரம், நகா்ப்புற மேம்பாடு, கலாசாரம், புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கம், விமான போக்குவரத்து, ரயில்வே, உணவு மற்றும் நுகா்வோா் விவகாரம், ஜல் சக்தி, பெட்ரோலியம், எஃகு, வெளியுறவுத் துறை, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அமைச்சா்கள், இணையமைச்சா்கள் ஆகியோரிடம் இதுவரை பிரதமா் மோடி ஆலோசனை நடத்தியுள்ளாா்.

இந்த ஆலோசனையின்போது பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, பொதுச் செயலா் பி.எல்.சந்தோஷ் ஆகியோருடம் பங்கேற்றனா்.

பிரதமா் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வாரத்தில் ஒரு முறையும், அமைச்சா்கள் குழுக் கூட்டம் மாதத்தில் ஒரு முறையும் நடைபெறுவது வழக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com