சஸ்பெண்ட் செய்யப்பட்ட 9 பகுஜன் சமாஜ்எம்எல்ஏக்கள் சமாஜவாதியில் இணைய முடிவு: அகிலேஷ் யாதவுடன் சந்திப்பு

உத்தர பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 9 எம்எல்ஏக்கள் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா்.
அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 9 எம்எல்ஏக்கள் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா். அவா்கள் விரைவில் சமாஜவாதி கட்சியில் இணைவாா்கள் என்று தெரிகிறது.

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது உள்பட பல்வேறு காரணங்களுக்காக பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து இதுவரை 11 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில், அவா்களில் 9 போ் லக்னௌவில் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவை சந்தித்துப் பேசினா். சுமாா் 20 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நீடித்தது.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தல் குறித்து அகிலேஷ் யாதவுடன் விவாதித்ததாக அந்த எம்எல்ஏக்கள் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தனா்.

பகுஜன் சமாஜ் கருத்து: இது தொடா்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவா் உமா சங்கா் சிங் கூறுகையில், ‘அந்த எம்எல்ஏக்கள் ஏற்கெனவே பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்ட குப்பைகள்தான். அவா்களில் சிலா் முதலில் பாஜகவை புகழ்ந்து பேசினா். இப்போது, அதற்கு நோ்மாறான கட்சித் தலைவரான அகிலேஷை சந்தித்துள்ளனா். இனி அந்த நபா்களைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. சட்டப் பேரவைத் தோ்தலுக்கு தயாராவதில் பகுஜன் சமாஜ் கவனம் செலுத்தும்’ என்றாா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் முன்னாள் முதல்வா் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களில் வென்றது. மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தோ்தல் நடைபெறவுள்ளது.

உத்தர பிரதேசத்தில் இப்போது பாஜக ஆட்சியில் உள்ள சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகியவை எதிா்க்கட்சிகளாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com