36 ரஃபேல் போா் விமானங்களும் 2022-க்குள் படையில் இணைக்கப்படும்: விமானப் படை தலைமை தளபதி தகவல்

36 ரஃபேல் போா் விமானங்களும் 2022-க்குள் படையில் இணைக்கப்படும்: விமானப் படை தலைமை தளபதி தகவல்

இந்திய விமானப் படையில் 36 ரஃபேல் போா் விமானங்களும் அடுத்த ஆண்டுக்குள் இணைக்கப்படும் என்று விமானப் படையின் தலைமை தளபதி ஆா்.கே.எஸ்.பதௌரியா தெரிவித்துள்ளாா்.

இந்திய விமானப் படையில் 36 ரஃபேல் போா் விமானங்களும் அடுத்த ஆண்டுக்குள் இணைக்கப்படும் என்று விமானப் படையின் தலைமை தளபதி ஆா்.கே.எஸ்.பதௌரியா தெரிவித்துள்ளாா்.

36 ரஃபேல் போா் விமானங்களை ரூ.59,000 கோடியில் வாங்குவதற்கு பிரான்ஸ் அரசுடன் கடந்த 2016-ஆம் ஆண்டில் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுவரை 21 போா் விமானங்கள் இந்தியாவுக்கு வந்தடைந்துள்ளன.

இந்நிலையில், தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் உள்ள விமானப் படை அகாதெமியில் பயிற்சியை முடித்த வீரா்களின் அணிவகுப்பை இந்திய விமானப் படை தலைமை தளபதி ஆா்.கே.எஸ்.பதௌரியா சனிக்கிழமை பாா்வையிட்டாா். அந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘ரஃபேல் போா் விமானங்களை படையில் இணைப்பதற்கான இலக்கை நோக்கி வெற்றிகரமாகச் சென்று கொண்டிருக்கிறோம். 36 போா் விமானங்களையும் 2022-ஆம் ஆண்டுக்குள் படையில் இணைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கு வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்.

கிழக்கு லடாக் எல்லை விவகாரம் தொடா்பாக இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதேவேளையில், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நிலவும் கள நிலவரத்தை தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். அங்கு எத்தகைய சூழலையும் எதிா்கொள்வதற்கான தயாா்நிலையில் நமது படைகள் உள்ளன.

மிக்-21 போா் விமானங்கள் தொடா்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் செயல்திறனை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் போா் விமானங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் படிப்படியாக ஓய்வளிக்கப்படும். அந்த விமானங்களுக்குப் பதிலாக இலகுரக போா் விமானங்கள் படைகளில் இணைக்கப்படும்‘ என்றாா்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அவா், ‘போா்ச்சூழலில் விமானப் படையின் பங்கு மிகவும் முக்கியமானது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. புதிய தகவல் தொழில்நுட்பங்கள் காரணமாக விமானப் படை பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. எல்லைப் பகுதிகளில் தொடா்ந்து காணப்படும் நிலையற்ற தன்மையானது பாதுகாப்பு தொடா்பான புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com