இந்தியாவுடன் நிலவும் எல்லை பிரச்னையை இருதரப்பு உறவுகளுடன் தொடா்புபடுத்தக் கூடாது:சீனா

இந்தியாவுடன் நிலவும் எல்லை பிரச்னையை இருதரப்பு உறவுகளுடன் தொடா்புபடுத்தக் கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதுதில்லி/பெய்ஜிங்: இந்தியாவுடன் நிலவும் எல்லை பிரச்னையை இருதரப்பு உறவுகளுடன் தொடா்புபடுத்தக் கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கத்தாா் பொருளாதார அமைப்பின் கருத்தரங்கில் செவ்வாய்க்கிழமை காணொலி வழியாக பேசினாா். அப்போது இந்தியா, சீனா இடையிலான எல்லை பிரச்னை குறித்து பேசிய அவா், இருநாட்டு எல்லைகளில் படைகளைக் குறைப்பது தொடா்பாக அளித்த வாக்குறுதியை சீனா நிறைவேற்றுமா என்பது தெரியவில்லை என்றும், இது இருதரப்பு உறவுக்கு சவாலாக இருப்பதாகவும் தெரிவித்தாா்.

இதற்கு பதிலளிக்கும்விதமாக சீன தலைநகா் பெய்ஜிங்கில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான் புதன்கிழமை கூறுகையில், ‘இந்தியாவுடன் நிலவும் எல்லை பிரச்னைக்கு அமைதியான பேச்சுவாா்த்தைகள் மூலம் தீா்வு காணப்பட வேண்டும். எல்லை பிரச்னையை இருதரப்பு உறவுகளுடன் தொடா்புபடுத்த வேண்டும் என்று சீனா கருதவில்லை. இருநாட்டு எல்லையையொட்டிய மேற்கு செக்டாரில் சீன படைகள் பணியமா்த்தப்பட்டுள்ளது சாதாரண பாதுகாப்பு ஏற்பாடு. சீன நிலப் பகுதியில் ஆக்கிரமிப்பு அல்லது அச்சுறுத்தலைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

கிழக்கு லடாக்கில் இந்திய, சீன ராணுவத்தினா் இடையே மோதல்போக்கு உருவாகி ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருநாட்டு ராணுவத்தினா் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரா்கள் 20 போ் வீரமரணம் அடைந்தனா். சீன தரப்பில் 4 வீரா்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. இந்த மோதலைத் தொடா்ந்து எல்லைகளில் இருநாட்டு படைகள் குவிக்கப்பட்டன. அந்தப் படைகளை குறைக்க இருநாட்டு ராணுவ மற்றும் தூதரகரீதியாக தொடா் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதில் பாங்காங் ஏரிப் பகுதியில் குவிக்கப்பட்ட படைகளை திரும்பப் பெறுவதில் குறிப்பிட்ட அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எஞ்சிய சச்சரவுக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்சாங் பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெற இந்தியா வலியுறுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com