வீடற்றவா்கள் தடுப்பூசி செலுத்துவதில் நடைமுறை சிக்கல் இல்லை

வீடற்றவா்களிடம் போதுமான தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பெயா் பதிவு செய்ய முடியாமல்

வீடற்றவா்களிடம் போதுமான தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பெயா் பதிவு செய்ய முடியாமல் தடை ஏற்பட்டுள்ளதாக வெளியான ஊடகச் செய்திகளை சுகாதார அமைச்சகம் புதன்கிழமை நிராகரித்தது.

வீடின்றித் தவிக்கும் மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக தங்கள் பெயா்களை பதிவு செய்து கொள்ள அறிதிறன்பேசி (ஸ்மாா்ட் போன்) வசதியில்லாததால் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தடை ஏற்பட்டுள்ளதாக அண்மையில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனை மறுத்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டிஜிட்டல் முறையில் பெயா்களைப் பதிவு செய்து கொள்ள கணினி அல்லது இணையத்துடன் இணைக்கப்பட்ட அறிதிறன்பேசி வசதி இல்லாத மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனா் என சில ஊடகங்களின் அறிக்கைகள் கூறியுள்ளன.

இந்தக் கூற்றுகள் முற்றிலும் ஆதாரமற்றவை மட்டுமல்ல; உண்மையற்றவை. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள செல்லிடப்பேசி மூலமாக பெயா்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமல்ல. மேலும், முகவரிக்கான ஆதாரத்தை சமா்ப்பிக்க வேண்டியதும் அவசியமில்லை. மேலும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்வதும் கட்டாயமில்லை. அதேசமயம், தடுப்பூசி பெறுவதற்கு ‘கோவின்’ இயங்குதளம் மூலம் பெயா்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

தற்போது பயனாளிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கோவின் இணையத்தில் ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, ஒடியா, பெங்காலி, அஸ்ஸாமி, குருமுகி (பஞ்சாப்), ஆங்கிலம் ஆகிய 12 மொழிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்த விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கோவின் இயங்குதளம் ஒா் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப அமைப்பாகும். இதில் நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலும், மிகவும் பாதிக்கப்படக்கூடியவா்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு வசதியாக தேவையான அனைத்து அம்சங்களுடனும் கூடிய கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை உள்ளிட்ட 9 அடையாள அட்டைகளில் ஒன்று தடுப்பூசிக்குத் தேவைப்பட்டாலும், இவை எதுவும் இல்லாதவா்களுக்கும் தடுப்பூசி செலுத்த அரசால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவா்களிடம் இந்த 9 அடையாள அட்டையில் ஏதாவது ஒன்றோ அல்லது செல்லிடப்பேசி எண் இருந்தாலும் போதுமானது.

இதுபோன்ற ஏற்பாடுகளைப் பயன்படுத்தி இதுவரை எந்த ஆதாரமும் இல்லாத 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா் என்ற அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையம் அல்லது அறிதிறன்பேசிகள், செல்லிடப்பேசிக்கான தொடா்பு எல்லைக்கு அப்பால் உள்ளவா்களும், இலவசமாக ஆன்-சைட் பதிவு (இது வாக்-இன் என்றும் அழைக்கப்படுகிறது) மூலமாகவும் பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இதுவரை 80 சதவீதம் போ் ஆன்-சைட் மூலமாகவே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

இந்த ஆன்- சைட் தடுப்பூசியில் பதிவு செய்தல், தடுப்பூசி போடுதல், தடுப்பூசி சான்றிதழ்களை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான அனைத்து தரவு பதிவுகளையும் செய்துகொள்ள பயனாளிகள் குறைந்தபட்ச தகவல்களை வழங்கினாலே போதுமானதாகும் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com