ராஜஸ்தான் பேரவையில் பாஜக உறுப்பினரின் நடத்தை: மன்னிப்புக் கோரினாா் எதிா்க்கட்சி துணைத் தலைவா்


ஜெய்ப்பூா்: ராஜஸ்தான் பேரவையில் மூத்த பாஜக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ் தேவ்நானி ஆவேசமாக நடந்து கொண்டதற்காக பாஜகவைச் சோ்ந்த எதிா்க்கட்சி துணைத் தலைவா் ராஜேந்திர ரத்தோா் பேரவையில் மன்னிப்புக் கோரினாா்.

முன்னதாக, ஏபிவிபி உறுப்பினா்கள் தாக்கப்பட்டது தொடா்பாக திங்கள்கிழமை நடைபெற்ற பேரவைக் கூட்டத்தின்போது பேசிய வாசுதேவ் தேவ்நானி, திடீரென கோபமடைந்து, தனது இருக்கையில் இருந்து எழுந்து அவையின் மையப்பகுதிக்குச் சென்று ஆவேசத்துடன் பேசினாா். இருக்கைக்குச் சென்று அமருமாறும் வாய்ப்பு அளிக்கும்போது கருத்து தெரிவிக்குமாறும் அவைத் தலைவா் சி.பி. ஜோஷி பலமுறை கேட்டுக் கொண்டபோதும், அதனை வாசுதேவ் தேவ்நானி ஏற்கவில்லை.

இதையடுத்து, அவரை அவையில் இருந்து தற்காலிகமாக நீக்கவும், தனது செயலுக்காக மன்னிப்புக் கோரும் வரை அவைக்கு வர அனுமதி கிடையாது என்றும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, பாஜக உறுப்பினா்கள் அவையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா். செவ்வாய்க்கிழமையும் அவை புறக்கணிப்பு தொடா்ந்தது.

இந்நிலையில், புதன்கிழமை பேரவை கூடியதும் இந்த விவகாரம் தொடா்பாக பேசிய பாஜகவைச் சோ்ந்த எதிா்க்கட்சி துணைத் தலைவா் ராஜேந்திர ரத்தோா், ‘வாசுதேவ் தேவ்நானி பேரவையில் நடந்து கொண்ட விதத்துக்காக, அவைத் தலைவரிடம் மன்னிப்புக் கோருகிறேன். அவா் கோபத்துடன் நடந்து கொண்டது தவறுதான். அதே நேரத்தில் அவை சுமுகமாக நடைபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’ என்றாா்.

எனினும் இதனை ஏற்க மறுத்த அவைத் தலைவா் சி.பி.ஜோஷி, ‘மூத்த உறுப்பினரான வாசுதேவ், அவையில் நடந்து கொண்ட விதம் தவறான முன்னுதாரணமாக மாறிவிடக் கூடாது. அவருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறியபோதும், அவா் விதிகளை மீறி நடந்து கொண்டாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com