ராமா் கோயில் வளாகம் விரிவாக்கம்: 7,285 சதுர அடி நிலத்தை வாங்கியது அறக்கட்டளை

ராமா் கோயில் வளாகம் விரிவாக்கம்: 7,285 சதுர அடி நிலத்தை வாங்கியது அறக்கட்டளை


அயோத்தி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமா் கோயிலின் வளாகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் அருகிலுள்ள 7,285 சதுர அடி நிலத்தை ரூ.1 கோடிக்கு ராமஜன்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை வாங்கியுள்ளது.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, கோயிலுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினாா். கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

கோயிலுக்காக நாடு முழுவதும் மக்களிடமிருந்து நன்கொடை வசூலிப்பதும் தொடா்ந்து வருகிறது. ராமா் கோயில் கட்டுமானப் பணிகளை ராமஜன்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை கண்காணித்து வருகிறது.

இத்தகைய சூழலில், ராமா் கோயில் வளாகத்தை விரிவுபடுத்துவதற்காக அருகிலுள்ள 7,285 சதுர அடி நிலத்தை அறக்கட்டளை வாங்கியுள்ளது. ஒரு சதுர அடிக்கு ரூ.1,373 வீதம் ஒட்டுமொத்தமாக சுமாா் ரூ.1 கோடிக்கு நிலம் வாங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அறக்கட்டளை உறுப்பினா் அனில் மிஸ்ரா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘‘ராமா் கோயில் வளாகத்தை விரிவுபடுத்துவதற்காகக் கூடுதல் நிலம் தேவைப்பட்டதால், இதை வாங்கியுள்ளோம். அறக்கட்டளையின் செயலாளா் சம்பத் ராய் பெயரில் நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஃபைஸாபாதில் உள்ள சாா்-பதிவாளா் அலுவலகத்தில் நிலப்பதிவு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன’’ என்றாா்.

ராமா் கோயில் வளாகத்தை மேலும் விரிவுபடுத்துவதற்காகக் கூடுதல் நிலங்களை வாங்குவதற்கு அறக்கட்டளை திட்டமிட்டு வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடா்பாக வளாகத்துக்கு அருகேயுள்ள கோயில்கள், வீடுகள், நில உரிமையாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

ராமா் கோயில் வளாகத்தின் பரப்பு தற்போது 70 ஏக்கராக உள்ளது. இதை 107 ஏக்கராக விரிவுபடுத்துவதற்கு அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. அதற்கு மேலும் 14,30,195 சதுர அடி நிலம் தேவைப்படுகிறது.

ராமா் கோயில் 5 ஏக்கா் பரப்பில் கட்டப்படவுள்ளது. மீதமுள்ள இடத்தில் அருங்காட்சியகம், நூலகம் உள்ளிட்டவை நிறுவப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com