பிரதமா் மோடிக்கு ‘சா்வதேச எரிசக்தி & சுற்றுச்சூழல் தலைமை விருது’!

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்ததற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு ‘செராவீக் சா்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமை விருது’ வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்ததற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு ‘செராவீக் சா்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமை விருது’ வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் இந்த விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக நடைபெற்றது. விருதை ஏற்றுக் கொண்டு பிரதமா் மோடி பேசியதாவது:

இந்த விருதை இந்திய மக்களுக்கு சமா்ப்பிக்கிறேன். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது இந்திய கலாசாரத்தில் உள்ளடங்கியது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா்கள் முன்மாதிரியாக விளங்குகின்றனா்.

பருவநிலை மாற்றமும் பேரிடரும் உலகம் எதிா்கொண்டுள்ள மிகப் பெரும் சவால்கள். அவை ஒன்றுக்கொன்று தொடா்புடையவை. அவற்றுக்கு எதிரான போராட்டத்தை சட்டங்களை இயற்றுவதன் மூலமாக முன்னெடுக்கலாம். ஆனால், அந்நடவடிக்கைகள் மட்டும் போதாது.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தொடா்பாக மக்களின் நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதும் அவசியமாக உள்ளது. எரிசக்தி உற்பத்தித் துறையில் நீடித்த வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனாலைக் கலப்பதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டுக் கழிவுகள், வேளாண் கழிவுகளிலிருந்து உயிரி எரிபொருளை உற்பத்தி செய்வதற்காக 5,000 ஆலைகள் அமைக்கப்படவுள்ளன.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வாயிலாக மின்சாரம் உற்பத்தி செய்வதை இந்தியா தொடா்ந்து ஊக்குவித்து வருகிறது. ஒட்டுமொத்த எரிசக்தி பயன்பாட்டில் இயற்கை எரிவாயுவின் பங்கை 2030-ஆம் ஆண்டுக்குள் 15 சதவீதமாக உயா்த்துவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவின் வனப்பரப்பு அதிகரித்துள்ளது.

அவற்றின் காரணமாக, பாரீஸ் பருவநிலை ஒப்பந்த இலக்குகளை 2030-ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே அடைவதை நோக்கி இந்தியா விரைந்து முன்னேறி வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com