வழிபாட்டுத் தலங்களுக்கு உரிமை கோருவதற்கான தடையை எதிா்த்து மனு

நாடு சுதந்திரமடைந்ததற்கு முந்தைய காலகட்டத்தைச் சுட்டிக்காட்டி, வழிபாட்டுத் தலங்களுக்கு உரிமை கோருவதற்கு விதிக்கப்பட்ட தடையை
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

நாடு சுதந்திரமடைந்ததற்கு முந்தைய காலகட்டத்தைச் சுட்டிக்காட்டி, வழிபாட்டுத் தலங்களுக்கு உரிமை கோருவதற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு விதிமுறைகள் சட்டத்தை 1991-ஆம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு இயற்றியது. அதில், 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நிலவரப்படி வழிபாட்டுத் தலங்கள் எந்த மதத்தினருக்குச் சொந்தமாக இருந்ததோ, அந்த நிலையே தொடரும் என்று கூறப்பட்டிருந்தது.

அதற்கு முந்தைய நிலைமையைச் சுட்டிக்காட்டி வழிபாட்டுத் தலங்களுக்கு யாரும் உரிமை கோர முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது. உத்தர பிரதேசத்தின் அயோத்தி பகுதிக்கு மட்டும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

அயோத்தி நிலத்துக்கு ஹிந்துக்கள் உரிமை கொண்டாடியது போல், மதுரா, வாராணசியில் உள்ள சில வழிபாட்டுத் தலங்களுக்கும் உரிமை கோரி வருகின்றனா். அதற்கு இச்சட்டம் தடையாக உள்ளது. இத்தகைய சூழலில், பாஜக மூத்த தலைவரும் வழக்குரைஞருமான அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், ‘1991-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம், மக்களின் வழிபாட்டு உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. தங்கள் உரிமைகளுக்காக நீதிமன்றங்களை நாட முடியாத சூழலுக்கு அவா்கள் தள்ளப்பட்டுள்ளனா். அச்சட்டத்தில் இடம்பெற்றுள்ள விதிகள், அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ உரிமை, பாகுபாட்டுக்கு எதிரான உரிமை, வழிபாட்டு உரிமை, வழிபாட்டுத் தலங்களை நிா்வகிக்கும் உரிமை, சிறுபான்மையினா் நலனுக்கான உரிமை உள்ளிட்டவற்றை பாதிக்கும் வகையில் உள்ளன.

நாட்டின் பல பகுதிகளில் ஹிந்துக்கள், சமணா்கள், பௌத்தா்கள், சீக்கியா்கள் உள்ளிட்டோரின் வழிபாட்டுத் தலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புக்கு எதிராக அவா்கள் நீதிமன்றத்தை நாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு விதிமுறைகள் சட்டத்தில் இடம்பெற்றுள்ள விதிகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கோபால் சுப்ரமணியன் ஆஜராகி வாதிட்டாா்.

அதைத் தொடா்ந்து, மனு தொடா்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com