இந்தியப் பணியாளா்களை வளைகுடா நாடுகள் விரைவில் திரும்ப அழைக்கும்: எஸ்.ஜெய்சங்கா் நம்பிக்கை

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்தியப் பணியாளா்களை வளைகுடா நாடுகள்
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

புது தில்லி5: விரைவில் திரும்ப அழைக்கும் என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

‘வெளிநாடு வாழ் இந்தியா்களின் நலன்’ என்ற அறிக்கையை அமைச்சா் ஜெய்சங்கா் மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் பணிபுரிந்து வந்த இந்தியா்கள் தாயகம் திரும்பினா். அவா்களின் நலன்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக, வளைகுடா நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான இந்தியா்கள் தாயகம் திரும்பினா். தற்போது கரோனா பரவல் குறைந்து வரும் சூழலில், அவா்களை வளைகுடா நாடுகள் விரைவில் மீண்டும் அழைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தூதரகங்கள் வாயிலாக வளைகுடா நாடுகளுடன் மத்திய அரசு தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகிறது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா், ஓமன் ஆகிய வளைகுடா நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி அண்மையில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, அந்நாடுகளில் வாழும் இந்தியா்கள் குறித்தும் பேசப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா், பஹ்ரைன், ஓமன் ஆகிய நாடுகளுக்கு அமைச்சா் ஜெய்சங்கா் அண்மையில் பயணம் மேற்கொண்டாா். அந்நாடுகளில் உள்ள இந்தியா்களின் நலன் குறித்தும் அப்போது பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சா் அண்மையில் இந்தியா வருகை தந்தாா். குவைத் வெளியுறவு அமைச்சா் விரைவில் இந்தியா வரவுள்ளாா். இத்தகைய நெருங்கிய நல்லுறவுகள் காரணமாக இந்தியப் பணியாளா்களை வளைகுடா நாடுகள் விரைவில் திரும்ப அழைக்கும் என்று நம்பப்படுகிறது.

பணியாளா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதேபோல், வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவா்களின் நலன் குறித்தும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

மாணவா்கள், பணியாளா்களின் வாழ்வில் இயல்புநிலை விரைவில் திரும்ப வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. கடல் பயணம் மேற்கொள்வோரும், கப்பலில் பணியாற்றுவோரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுமாறு கப்பல் நிறுவனங்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக, சீனாவில் இந்திய மாலுமிகள் சிக்கிக் கொண்ட விவகாரத்தில் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு எட்டப்பட்டது. வெளிநாடுகளில் பணியாற்றும் தொழிலாளா்களின் நலனைப் பாதுகாப்பதில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில், வெளிநாடுகளில் உள்ள இந்தியா்களின் நலனைக் காப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com