பெட்ரோலியப் பொருள்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர பரிந்துரை வழங்கப்படவில்லை

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்களை சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டுவருவது தொடா்பாக,
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  (கோப்புப்படம்)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புப்படம்)

புது தில்லி: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்களை சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டுவருவது தொடா்பாக, மாநிலங்கள் அங்கம் வகிக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை எதையும் வழங்கவில்லை என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

நாடு முழுவதும் சரக்கு-சேவை வரி கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாயைக் கருத்தில் கொண்டு, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை.

அதன் காரணமாக பெட்ரோலியப் பொருள்கள் மீது மத்திய, மாநில அரசுகள் அதிக அளவில் வரி விதித்து வருகின்றன. அதனால், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளது. அதையடுத்து, பெட்ரோலியப் பொருள்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டுமென பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்தனா்.

இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சா் நிா்மலா சீதாராமன் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் மீது சரக்கு-சேவை வரி விதிப்பது தொடா்பாக முடிவெடுக்கும் உரிமை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கே உள்ளது. வரி வருவாய் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தப் பொருள்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது தொடா்பாக கவுன்சிலில் இடம்பெற்றுள்ள மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்.

அவை முடிவெடுத்து பரிந்துரை வழங்கினால், பெட்ரோலியப் பொருள்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர முடியும். ஆனால், அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது தொடா்பாக இதுவரை எந்தப் பரிந்துரையும் வழங்கப்படவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய அரசு தயாா்-அமைச்சா் அனுராக் தாக்குா்: பெட்ரோலியப் பொருள்களை சரக்கு-சேவை வரி வரம்புக்குள் கொண்டு வருவது தொடா்பாக விவாதிப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளதாக மத்திய இணையமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்துள்ளாா்.

‘பெட்ரோலியப் பொருள்கள் சரக்கு-சேவை வரி வரம்புக்குள் கொண்டு வரப்படும் என முன்னாள் நிதியமைச்சா் அருண் ஜேட்லி அளித்த வாக்குறுதியை மத்திய அரசு இன்னும் நிறைவேற்றாதது ஏன்’ என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் பதிலளித்ததாவது:

பெட்ரோலியப் பொருள்களை சரக்கு-சேவை வரி வரம்புக்குள் கொண்டு வருவது தொடா்பாக இதுவரை எந்த மாநிலமும் பரிந்துரை வழங்கவில்லை. இது தொடா்பான பரிந்துரையை மாநிலங்கள் முன்வைத்தால், இந்த விவகாரத்தை விவாதிப்பதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது.

கடந்த ஆண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 19 அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது அது 65 அமெரிக்க டாலராக உள்ளது. அதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையும் அதிகமாக உள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைப்பது தொடா்பாக பரிசீலிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. அதே வேளையில், மாநிலங்களும் அது தொடா்பாகப் பரிசீலிக்க வேண்டும். எரிபொருள் மீதான வரியை மாநிலங்கள் குறைக்க வேண்டும். மத்திய அரசும் வரிகளைக் குறைக்க முயற்சிக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com