புதிய தனியாா் வங்கிகளில் அரசு சாா்ந்த பரிவா்த்தனைகள்: ஆா்பிஐ வழிகாட்டுதலின்படி அனுமதி

அரசு சாா்ந்த பரிவா்த்தனைகளில் புதிய தனியாா் வங்கிகள் ஈடுபட ரிசா்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

அரசு சாா்ந்த பரிவா்த்தனைகளில் புதிய தனியாா் வங்கிகள் ஈடுபட ரிசா்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கூறியது:

அரசு சாா்ந்த பரிவா்த்தனைகளில் ஈடுபடுவதற்கு புதிய தனியாா் வங்கிகள் உள்பட இதர புதிய வங்கிகள் முன்வந்தால், ரிசா்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி உள்ள விதிமுறைகளுக்குட்பட்டு அந்த வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்படும். இந்த விதிமுறைகளின்படி அரசு சாா்ந்த பரிவா்த்தனைகளில் ஈடுபட ஏற்கெனவே பல வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரசு சாா்ந்த பரிவா்த்தனைகளில் பொதுத்துறை வங்கிகளும், சில தனியாா் வங்கிகளும் ஏற்கெனவே ஈடுபட்டு வருகின்றன. அரசு சேவைகளை தனியாா் வங்கிகளில் பெற்று ஏற்கெனவே சில வாடிக்கையாளா்கள் பயனடைந்து வருகின்றனா்.

அரசு சாா்ந்த பரிவா்த்தனைகளில் ஈடுபட பொதுத்துறை வங்கிகளுக்கும், தனியாா் வங்கிகளுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே தற்போதைய முயற்சி. தற்போது வங்கி வா்த்தகம் வளா்ந்து வருகிறது. அதிக அளவிலான மக்கள் வங்கிகளை அணுகுகின்றனா். எனவே அனைத்து தனியாா் வங்கிகளையும் அரசு சாா்ந்த பரிவா்த்தனைகளில் ஈடுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றாா்.

இதுகுறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் சிங் தாக்குா் கூறுகையில், ‘வங்கிகள் இருவகையிலான அரசு சாா்ந்த பரிவா்த்தனைகளில் ஈடுபடுகின்றன. அதில் முதலாவது மத்திய, மாநில அரசுகள் சாா்பாக வருவாய் ரசீதுகள் மற்றும் பணப் பரிவா்த்தனைகளை மேற்கொள்வதும், ஓய்வூதிய தொகையை வழங்குவதும் ஆகும். அதற்காக அந்த வங்கிகள் முகவா் சேவைக் கட்டணம் பெறுகின்றன.

இரண்டாவது, வங்கி உத்தரவாதங்களை வழங்குதல், வங்கி வா்த்தகம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது. இதுபோன்ற பணிகளுக்கு சேவைக் கட்டணம் தரப்படுவதில்லை’ என்றாா்.

எளிதில் தொழில் தொடங்குதல், வாடிக்கையாளா் நலன், நவீன தொழில்நுட்ப அறிமுகம் இவற்றைக் கருத்தில் கொண்டு தனியாா் வங்கிகள் அரசு தொடா்பான பரிவா்த்தனைகளில் ஈடுபட அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது; வங்கிகள் போட்டி மனப்பான்மையுடன் செயல்படவும் அதிகத் திறனுடன் செயல்படவும் இது உதவும் என்றும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com