மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்துக்கு கூடுதல் முக்கியத்துவம்: இஸ்ரோ முன்னாள் தலைவா் வலியுறுத்தல்

மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவா் மாதவன் நாயா் வலியுறுத்தியுள்ளாா்.

மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவா் மாதவன் நாயா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் மேலும் கூறியுள்ளதாவது:

பூமி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடா்பு தளங்களை உருவாக்குவதற்கான அடிப்படை தொழில்நுட்பம் இந்தியாவிடம் ஏற்கெனவே உள்ளது. ஆனால், அதனை உலக சந்தையில் நாம் பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம்.

சா்வதேச விலையுடன் ஒப்பிடும்போது செயற்கைக்கோள் ஏவும் சேவைகளை வழங்குவதற்கு கட்டணம் 30 முதல் 40 சதவீதம் வரை குறைவாகவே உள்ளது.

செயற்கைக்கோள் ஏவும் திறனை கொண்டிராத நாடுகளிடமிருந்து வா்த்தக வாய்ப்புகளை கைப்பற்றக்கூடிய திறன் இந்தியாவிடம் இயற்கையாகவே அமைந்துள்ளது. எனவே, அந்த சந்தைப் பங்களிப்பை கைப்பற்ற நாம் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும்.

மறுபயன்பாட்டுக்கான ராக்கெட் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்தியா விண்வெளித் துறையில் புரட்சியை ஏற்படுத்த முடியும். உண்மையில், 15-20 ஆண்டுகளாக இந்த தொழில்நுட்பம் குறித்து பேசி வருகிறோமே தவிர அதில் முன்னேற்றம் எதையும் காணவில்லை.

மறுபயன்பாட்டுக்கான ராக்கெட்டுகளை ஏவும் தொழில்நுட்பத்தை நாம் கண்டறியாவிட்டால் விண்வெளி போக்குவரத்துக்கான செலவினங்களை குறைக்க முடியாது. எனவே, அதில் நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோன்று, விண்வெளித் துறைக்கான சா்வதேச வா்த்தகத்துக்கும் இந்தியா அதிக முக்கியத்துவம் தர வேண்டும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனா் எலன் மஸ்கின் வா்த்தக வழிமுறையை பின்பற்றுவதன் மூலமாக விண்வெளித் துறையில் முழுத் திறனையும் வெளிப்படுத்தலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com