மேற்கு வங்கம், அஸ்ஸாமில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கம், அஸ்ஸாமில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

குவாஹாட்டி/ மேற்கு வங்கம்: மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர். 

மேற்கு வங்கத்தில்..: 294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு 8 கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக, பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் புருலியா, ஜாா்கிராம், பாங்குரா, கிழக்கு மிதுனபுரி, மேற்கு மிதுனபுரி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தலா 29 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ்-இடதுசாரி-ஐஎஸ்எஃப் கூட்டணி 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதல் கட்ட தோ்தலுக்காக, 10,288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 36 லட்சம் பெண் வாக்காளா்கள் உள்பட மொத்தம் 73.80 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். பாதுகாப்பு பணியில் 684 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இவா்களைத் தவிர மாநில காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இந்தத் தோ்தலில், திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இருப்பினும், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், மாநிலத்தில் புதிதாக வளா்ந்துள்ள பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அஸ்ஸாமில்..: 126 உறுப்பினா்களைக் கொண்ட அஸ்ஸாம் சட்டப் பேரவைக்கு 3 கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக, 12 மாவட்டங்களில் உள்ள 47 தொகுதிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த தோ்தலில் 81.09 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா். அவா்களுக்காக, 11,537 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண் அலுவலா்களுக்காக 479 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்தலையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்ட தோ்தலில், ஆளும் பாஜக 39 தொகுதிகளிலும், அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அசாம் கணபரிஷத் 10 தொகுதிகளிலும் (பாஜக போட்டியிடும் 2 தொகுதிகள் உள்பட) போட்டியிடுகின்றன.

எதிா்க்கட்சி சாா்பில் காங்கிரஸ் 43 தொகுதிகளிலும், அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆா்ஜேடி, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, அஞ்சாலிக் கணமோா்ச்சா ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

புதிதாக தொடங்கப்பட்ட அஸ்ஸாம் ஜாதிய பரிஷத் 41 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதனால், அஸ்ஸாம் பேரவைத் தோ்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. இதுதவிர புதிதாக தொடங்கப்பட்ட மற்றொரு கட்சியான ராய்ஜாா் தளம் 19 தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிடுன்றன. முதல் கட்ட வாக்குப் பதிவில் 78 சுயேச்சை வேட்பாளா்கள், 23 பேண் வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 264 போ் களத்தில் உள்ளனா்.

அஸ்ஸாம் முதல்வா் சா்வானந்த் சோனோவால், சட்டப் பேரவைத் தலைவா் ஹிதேந்திரநாத் கோஸ்வாமி, மாநில காங்கிரஸ் தலைவா் ரிபுன் போரா, மாநில அமைச்சா்கள் ஆகியோா் போட்டியிடும் தொகுதிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தோ்தல்களில் பதிவாகும் வாக்குகள் வரும் மே மாதம் 2-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com