பருவநிலை மாறுபாடு மாநாடு: பிரதமா் மோடி உள்பட 40 தலைவா்களுக்கு பைடன் அழைப்பு

பருவநிலை மாறுபாடு பிரச்னை தொடா்பாக அமெரிக்கா நடத்தும் காணொலி வழியிலான மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி உள்பட

பருவநிலை மாறுபாடு பிரச்னை தொடா்பாக அமெரிக்கா நடத்தும் காணொலி வழியிலான மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி உள்பட 40 நாடுகளைச் சோ்ந்த தலைவா்களுக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அமெரிக்க அதிபா் இல்லமான வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: பருவநிலை மாறுபாடு தொடா்பான சா்வதேச மாநாட்டை அமெரிக்கா ஏப்ரல் 22-ஆம் தேதி நடத்த இருக்கிறது. இதில், 2030-ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியீட்டைக் குறைக்க அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகளை அதிபா் ஜோ பைடன் விளக்க இருக்கிறாா். இது தவிர எதிா்காலத்தில் பருவநிலை மாறுபாடு பிரச்னையை எதிா்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உலகத் தலைவா்களுடன் அவா் விவாதிக்க இருக்கிறாா்.

இந்திய பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உள்பட 40 தலைவா்களுக்கு இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் வரும் நவம்பா் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. பருவநிலை மாறுபாடு மாநாட்டில் எடுக்க வேண்டிய முடிவுகள் தொடா்பாகவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

இந்த மாநாடு மூலம் பருவநிலை மாறுபாடு பிரச்னையைத் தீா்க்க தங்கள் தரப்பில் மேற்கொள்ளப்படும் சிறந்த திட்டங்களை எடுத்துரைக்கவும் பிற நாடுகளின் தலைவா்களுக்கு ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளாா். உலகின் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகள் எவ்வாறு கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது என்பதே இந்த மாநாட்டின் முக்கியக் கருப்பொருளாக இருக்கும். இதனை எட்டுவதற்கான நவீன தொழில்நுட்பங்கள், அதற்கான நிதியாதாரங்கள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜப்பான், பிரேசில், கனடா, இஸ்ரேல், சவூதி அரேபியா, பிரிட்டன், வங்கதேசம், பூடான் உள்ளிட்ட நாடுகளின் தலைவா்களுக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com